Published : 02 Feb 2020 07:12 AM
Last Updated : 02 Feb 2020 07:12 AM

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடைபெறுவதை பார்த்த பின்பு புகார் தெரிவிக்காதவரும் குற்றவாளிக்கு உடந்தை: மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி எம்.ரவி எச்சரிக்கை

சென்னை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதைப் பார்த்த பின், அதுகுறித்து காவல்துறை புகார் தெரிவிக்காதவரும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படுவார் என்று மகளிர்மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ கடமைகள் குறித்த, சென்னை மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி எம்.ரவி பங்கேற்று பேசியதாவது:

இந்தப் பயிலரங்கில் கற்றுக் கொள்ளும் பாடங்களை வைத்து நல்ல ஒரு விழிப்புணர்வை, குழந்தைகள் மத்தியில், ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டம் குறித்து எளிமையாகக் கூற வேண்டும். 60 நாட்களுக்குள் போலீஸார் வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

ஓராண்டுக்குள் நீதிமன்றத்தில் விசாரணையை முடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். இந்த சட்டத்தின்படி, குற்றம்நடைபெறுவதைப் பார்த்த பின்பு,அதை காவல் துறைக்கு தெரிவிக்காவிட்டால் நீங்களும் குற்றவாளிகளுக்கு உடந்தையே, என்று அவர் கூறினார்.

முன்னதாக புதுச்சேரி மனித உரிமை ஆணையத் தலைவர் எம்.ஜெயச்சந்திரன் பேசியதாவது:

250 சதவீதம் அதிகரிப்பா?

தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கானசரியான காரணம் கண்டறியப்படவில்லை. அது இணையதளம், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் குழந்தைகள் தொடர்பான வீடியோவாகவும் இருக்கலாம்.

பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவது அதிகரித்திருப்பது, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவையும் குற்றங்கள் அதிக அளவில் பதிவாக காரணமாக இருக்கலாம். முந்தைய சட்டங்கள் போல் அல்லாமல், போக்சோ சட்டம் நடைமுறை சிக்கல்களை நீக்கி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை முதல், மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், துணைஆணையர் (கல்வி) கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், இந்திய குழந்தைகள் நல இயக்க ஆலோசகர் கிரிஜா குமாரபாபு, இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் தலைவர் சுபா காந்த்,இன்னர் வீல் மாவட்ட தலைவர் நளினி ஒளிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x