Published : 02 Feb 2020 06:36 AM
Last Updated : 02 Feb 2020 06:36 AM

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் இல்லை: பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை

மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பட்ஜெட், பொருளாதார தேக்க நிலைமை, கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கவலை கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தவிர வேறு எந்த உருப்படியான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்கள் மீதான அக்கறையை காட்டியுள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வருமானத்தை பெருக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஆக்கபூர்வமான திட்டங்கள் ஏதும்இல்லை. வருமான வரி விதிப்புகள் அனைத்தும் சமூகப் பாதுகாப்பை தகர்க்கும் வகையில் உள்ளது. கல்விக்கு நிதியைக் குறைத்து சமூக நீதிக் கொள்கையின் கட்டுமானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஜிஎஸ்டியால் வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை, புதிய சலுகைகளும் இல்லை. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.

வேலைவாய்ப்பை உரு வாக்கும் திட்டங்கள் ஏதும் இதில்இல்லை. வேலையற்ற இளைஞர்கள், சிறு குறு தொழில் செய்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றம் அளித்து விரக்தியை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக இது இருக்கிறது. கிராமப்புறப் பொருளாதாரத்தை, தமிழகத்தை அடியோடு புறக்கணித்து, சமூக நீதிக்கு எதிரான “புதிய கல்விக் கொள்கையை விரைந்துசெயல்படுத்துவோம்” என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த பட்ஜெட் அதிருப்தி தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x