Published : 01 Feb 2020 08:22 AM
Last Updated : 01 Feb 2020 08:22 AM

குற்ற செயல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: கூடுதல் டிஜிபி ரவி கருத்து

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் டிஜிபி எம்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்.

சென்னை

குற்ற செயல்களைத் தடுக்க எல்லோரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் என்று கூடுதல் டிஜிபி எம்.ரவி கூறியுள்ளார்.

பாலியல் தொழிலுக்காகவும், அடிமைகளாகவும் மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் சங்கத்தின் (மனித கடத்தல் எதிர்ப்பு கிளப்) தொடக்க விழா சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி எம்.ரவி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம்.நாயர், திரைப்பட இயக்குநர் யுரேகா, ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது முகத்தில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைக் கண்டித்து வாசகங்களை ஓவியங் களாக வரைந்திருந்தனர்.

பின்னர், கூடுதல் டிஜிபி ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டாலோ, ஆண்கள் கொத்தடிமைகளாக சிறை வைக்கப்பட்டாலோ, குழந்தைகள் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தாலோ பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும்.

காவலன் செயலி

தன்னார்வலர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் ஒருங்கிணைந்து செயல் படுவதன் மூலம் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லை.

அப்படியே ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். ‘காவலன்’ செயலியில் அனைத்து வகையான குற்றங்கள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x