Published : 01 Feb 2020 08:00 AM
Last Updated : 01 Feb 2020 08:00 AM
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகதமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டம், அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். ஒருவருடன் ஒருவர் கை கோர்த்தும், குடியுரிமை சட் டத்தை திரும்பப்பெற வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சென்னையில் திருவொற்றியூர் முதல் தாம்பரம் வரை 37 கி.மீ. நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் ‘இந்து’என்.ராம் பங்கேற்று, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான வழியில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. யாரும்எதிர்பார்த்திராத வகையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக இதில் பங்கேற்று வருகின்றனர். அதன் விளைவாக குடியுரிமை சட்டம் மட்டுமல்லாது அதோடு தொடர்புடைய தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை மத்திய அரசு திரும்பப்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, "இந்நாட்டின் குடிமகன் என்ற அடிப்படை உரிமையை பெறுவதில்மதத்தை புகுத்தும் மோசமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத, மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முறையை மத சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.
அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக எம்எல்ஏ க.பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இப்போராட்டம் குறித்து கல்வியாளரும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புரவலருமான தாவூத் மியாகான் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்தது. ஆனால் மக்களின் மனநிலை வேறாக உள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்தப் போராட்டத்தில் 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தன. மேலும் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு உலமாக்கள் பேரவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் பங்கேற்றிருந்தன. இப்போதாவது மக்களின் மனநிலை என்ன என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கும். மக்களின் மனநிலையை பல்வேறு போராட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து தெரிவிக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT