Published : 31 Jan 2020 07:45 AM
Last Updated : 31 Jan 2020 07:45 AM
திடீர் வானிலை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல்நேர வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் வழக்கமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குளிர் குறைவாக உள்ளது. பல்வேறு நகரங்களிலும் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
தற்போது வங்கக் கடலில் தெற்கு ஆந்திராவுக்கு அருகே எதிர்காற்று சுழற்சி நீடித்து வருகிறது. அதன் காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழக்கமாக தமிழகம் நோக்கி வீசும் குளிர்ச்சியான வடமேற்கு திசைக் காற்று, கடந்த ஒரு வாரமாக வீசவில்லை. தற்போது சற்று வெப்பமான தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைக் காற்று மட்டும் வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல்நேர வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இரவுநேர வெப்பநிலையும் தற்போது உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, சேலம், நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேலும் திருச்சி, மதுரையில் தலா 34 டிகிரி, பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, கோவை ஆகியஇடங்களில் 33 டிகிரி செல்சியஸ்பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பகுதிகளான உதகமண்டலத்தில் 8 டிகிரி, வால்பாறையில் 10 டிகிரி குன்னூரில் 12 டிகிரி, கொடைக்கானலில் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. உதகமண்டலத்தில் கடந்த வாரம் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி முதல் வாரம் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT