Published : 31 Jan 2020 07:23 AM
Last Updated : 31 Jan 2020 07:23 AM
பாரத் நெட் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி குறித்து பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்ப திமுகவினர் முயற்சிக்கின்றனர் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
பெரும் ஒப்பந்தங்களுக்கான ஒப் பந்தப்புள்ளி கோரப்படும்போது, அந்த ஒப்பந்தப்புள்ளியில் உள்ள பல்வேறு தகுதி, நிதி விதிமுறைகள் குறித்து பல்வேறு ஒப்பந்ததாரர்கள் தமது கருத்துகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க வாய்ப்பு அளிப்பது ஒரு இயல்பான நடைமுறை. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பிறகு, அதில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்களை அழைத்து முதலில் கூட்டம் (Pre Bid Meeting) நடத்தப்படும்.
இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பின், அந்த மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் அலுவலருக்கு உண்டு. இவ்வாறு விதிமுறைகள் மாற்றப்படும்போது அவை குறித்து மீண்டும் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் உண்டு.
இதன்படி, இறுதி நாளுக்கு 48 மணி நேரம் முன்பு வரைகூட மீண்டும் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை அலுவலர் மாற்றி அமைக்கலாம். இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய கூட்டம்கூட நடத்தப்படாத நிலையில், தவறு நடந்துவிட்டதாக கற்பனை செய்துகொண்டு பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறுகின்றனர். பொய் பிரச்சாரம் மூலம் மக்களை திசை திருப்ப முயலும் அரசியலை திமுகவினர் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
பாரத் நெட் திட்டத்தை சட்டப்படி முறையாக செயல்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு விடத்தயாரா என கேள்வி கேட்கும் ஐ.பெரியசாமியின் செயல் அவருடைய அறியாமையையே காட் டுகிறது.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT