Published : 31 Jan 2020 07:11 AM
Last Updated : 31 Jan 2020 07:11 AM
தமிழகத்தில் மற்ற மாசுகளைவிட சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவது மிகப்பெரிய மாசுவாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சூரிய மின்சக்தி திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்டம் பொதுமக்களுக்கு உகந்த திட்டம் அல்ல என்றும், இதனால் மனிதர்களின் உடலில் பல்வேறுவிதமான நோய்கள் பரவும் என்றும் பல்வேறு வதந்திகளையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த தவறான தகவல்களையும் கோவையைச் சேர்ந்த ஜாகிர்ஹூசைன் என்பவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரப்பியதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஜாகிர்ஹூசைன் ஜனவரி 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாகிர்ஹூசைன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.சேஷசாயி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனக்கு வந்த குறுஞ்செய்தியை பார்வேர்டு செய்ததாகவும், இது அவரது சொந்த கருத்து அல்ல என்றும், எந்த உள்நோக்கத்துடன் இந்த செய்தியை பரப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது போலீஸார் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ”இதுபோன்ற குற்றங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சூரிய மின்சக்தி திட்டம் குறித்தும், அமைச்சர் குறித்தும் மனுதாரர் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பொதுவெளியில் சமூக வலைதளங்களின் மூலமாக பரப்பியுள்ளார். குறிப்பாக சூரிய மின்சக்தியால் கொடிய நோய்கள் பரவும் என பீதி கிளப்பியுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங் கக்கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி என்.சேஷசாயி, ‘‘தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. சூரிய மின்சக்தி திட்டத்தால் நோய்கள் பரவும் என தகவல் பரப்பியுள்ள மனுதாரர், அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கருத்தை பரப்பியுள்ளாரா என் பதை அறிய விரும்புகிறேன். முதலில் அவர் என்ன படித்துள்ளார் என்பதை விளக்க வேண்டும். பேச்சு மற்றும் கருத்து உரிமைக்கு நான் எதிரானவன் கிடையாது. அதேநேரம் அந்த கருத்து பொறுப்பற்ற முறையில் இருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற வதந்திகளால் அரசின் நல்ல பல திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போய்விடும். மனுதாரர் பொதுவெளியில் பரப்பிய அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.
தமிழகத்தில் மற்ற மாசுகளை விட சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவதுதான் மிகப்பெரிய மாசுவாக உள்ளது. இது வேதனைக்குரியது. எனவே மனுதாரர் தனது தவறை உணர்ந்து, தான் அடிப்படை ஆதாரமற்ற தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டதாகக்கூறி அதே சமூக வலைதளம் மூலமாக மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டால் அவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT