Published : 31 Jan 2020 07:08 AM
Last Updated : 31 Jan 2020 07:08 AM
பச்சை வகைப்பாட்டு தொழிற் சாலைகள் இயங்குவதற்கான ஒப்புதலை நேரடியாக வழங்கும் திட்டத்தையும், நகர் ஊரமைப்புத் திட்டம் இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாடு மாற்றம் செய் வதற்கான ஒற்றைச் சாளர திட்டத்தையும் சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழா சென் னையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார். இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
வளர்ச்சிப் பாதையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உற்ற தோழனாகவும், ஆலோசகராகவும் தொடர்ந்து திகழ்ந்து வரும் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில் துறையை ஊக்குவிக்க அரசு பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பச்சை வகைப்பாடு தொழிற்சாலைகளை (Green Industries) இயக்குவதற்கான இசைவாணையை நேரடியாக வழங்கும்Direct CTO திட்டத்தை அறிவிக்கிறேன். இதன்படி, தொழில் பூங்காக்கள், அனுமதிக்கப்பட்ட இடங்களில்தொழில் தொடங்கும் பச்சை வகைப்பாட்டு நிறுவனங்கள், அதை நிறுவதற்கான இசைவை பெற, கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தால் போதுமானது.
அந்த இசைவைப் பெற காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வகையான நிறுவனங்கள் சுய சான்றின் அடிப்படையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம். இயங்குவதற்கான இசை வாணை பெற்றாலே போதும்.
அரசின் இப்புதிய திட்டத்தின் மூலம், பச்சை வகைப்பாட்டில் உள்ள மேலும் 63 வகை தொழிற்சாலைகள் பயன் பெறும். குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மேலும், நகர் ஊரமைப்புத் திட்டம் இல்லாத (Non Plan Area) பகுதிகளில், தொழிற்சாலை களுக்கான நில வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில், காலவரையறைக்கு உட்பட்டு வழங்கும் புதிய நடை முறையையும் அறிவிக்கிறேன். ஒற்றைச் சாளர முறையில், இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதிகபட்சம் 50 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இல்லாவிட்டால், நில வகைப்பாடு மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டதாகக் கருதி, அந்த நிறுவனம் பணிகளைத் தொடங்கலாம் என்றார்.
இவ்விழாவில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டலத் தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT