Published : 30 Jan 2020 05:30 PM
Last Updated : 30 Jan 2020 05:30 PM

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.30) வெளியிட்ட அறிக்கையில், "அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான டிஎன்பிஎஸ்சியின் குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்காக வெளிவரும் விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான லஞ்சப் பணம் கைமாறிய விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குரூப்-4 தேர்வு முறைகேடுகளின் அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பு தற்போது, குரூப்-2 தேர்விலும் லஞ்சம் வழங்கப்பட்ட விவரங்களும் சிபிசிஐடி விசாரணையில் வெளிவருகின்றன. தேர்வாணையத்தில் உள்ள பலர், காவல்துறை, பயிற்சி மையங்கள் என பல வகைகளில் ஊழல் பெருச்சாளிகள் கொண்ட பெரும் கூட்டம் இதற்குப் பின்னணியாக இயங்கி வந்துள்ளது.

இதன் மூலம் அனைத்து குரூப் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்ற பலமான சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தனது பொறுப்பில் இயங்கும் பணியாளர் துறையில் இப்படிப்பட்ட மோசமான முறைகேடு நடந்துள்ளது பற்றி சிறிது கூட கவலை கொள்ளாமல் பேட்டியளித்துள்ளார்.

"தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கக் கூடாது" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது நடந்து கொண்டிருக்கக் கூடிய விசாரணை ஒரு நாடகமா என்று மக்கள் கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.

தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமென்று பல சிரமங்களுக்கிடையே ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுத்து, பல நூல்களைப் படித்து தயார்படுத்தி வந்த லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடி வருகின்றன. பல அமைச்சர்கள் மீது, உயர்மட்ட அதிகாரிகள் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ள ஊழல்கள் வெளிவந்துள்ள நிலையில் இதற்கு பின்னணியாக அதிமுக ஆட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இருந்துள்ளனர் என்று கருத இடம் உள்ளது. ஊழல் மயமாகிவிட்ட அதிமுக அரசின் அனைத்து துறைகளும் ஊழலில் மூழ்கியுள்ளன என்பதற்கு இந்த தேர்வு முறைகேடுகள் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தற்போது நடந்து வரும் விசாரணை முறையாக நடப்பதற்கு வாய்ப்பு ஏதுமில்லை. எனவே, முறையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையான விசாரணை நடைபெறும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மேலும், வழக்கம் போல சாதாரண அடிமட்ட ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தவறுகளில் ஈடுபட்ட உயர் பதவிகளில் உள்ளவர்கள் தப்பி விட அனுமதிக்கக் கூடாது. இம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட உயர் பதவியில் உள்ளவர்கள் உட்பட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x