Published : 30 Jan 2020 07:16 AM
Last Updated : 30 Jan 2020 07:16 AM
நரசய்யா
ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸுக்கு இந்த ஆண்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசின் ஒரு முக்கிய பங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையாளர்களுக்கு பத்ம விருதுகள் அளிப்பதாகும். அதன் வழியாக, மக்களால் பரிந்துரைக்கப்பட்டு விருதைப் பெற்றுள்ள மனோகர் தேவதாஸ் ஓர் அதிசய மனிதர். அவரும், காலம்சென்ற அவரது மனைவியார் மஹிமாவும் போற்றத்தக்க, உதாரண மனிதர்கள்.
பார்வை இழந்தவர்களால் பார்க்க முடியுமா? பார்க்க முடிவது மட்டுமின்றி, தான் கண்ட சிறந்த காட்சிகளை மற்றவர்களுக்கு காட்டவும் முடியும் என்பதை தன் வாழ்விலேயே நிரூபித்துக்கொண்டு இருப்பவர் மனோகர்.
மதுரையில் 1936-ல் பிறந்த மனோகர், அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். சென்னையில் 1956-ல் குடியேறி, தன் படிப்பு சார்ந்த தொழிலில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதே, கோடுகளால் ஆன சித்திரம் வரைவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதுவும் கட்டிடங்கள், கோயில்கள், சிற்பங்கள் போன்ற கட்டமைப்புகளை வரைவதில் தனக்குள் ஆழமான தாக்கம் இருப்பதை உணர்ந்தார்.
அவர் பணியாற்றிய நிறுவனம், தொழில் சார்ந்த திறமையை அதிகரித்துக் கொள்வதற்கான பயிற்சிக்காக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. நகைச்சுவை உணர்வுமிக்க மனோகர், இங்கிலாந்து சென்று வந்தது, தனது திருமண வாய்ப்புகளை அதிகரித்தாகக் கூறுகிறார். ஆனாலும் தாம் விரும்பிய மஹிமா என்ற பெண்ணையே குடும்ப ஆசிகளோடு மணம்புரிந்தார். அப்பெண்மணிக்கும் கலை ஆர்வம் மிகுந்திருந்ததால், இவர்களது வாழ்க்கை தெள்ளிய நீரோட்டமாகவே இருந்தது.
வேதியியல் மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஓபர்லின் பல்கலைக்கழகத்தில் 1969-ல் சேர்ந்தார் மனோகர். மஹிமாவும் உடன் சென்றார். மனோகர் சொற்படி, இவர்களது வாழ்வில் சிறந்த நாட்கள் 1970-72 காலகட்டம்தான். சென்னை திரும்பி அதே நிறுவனத்தில் சேர்ந்து டெக்னிக்கல் டைரக்டராக ஓய்வு பெற்றார்.
துரதிர்ஷ்டவசமாக, 1960-ல் இவரது கண்களின் விழித்திரை ரெடினிடிஸ் பிக்மென்டோசா என்ற குணப்படுத்த முடியாத நோயால் தாக்கப்பட்டது. சிறிது சிறிதாக பார்வை குறைந்து, முடிவில் முற்றிலும் பார்வையை பறித்துவிடும் என்று அறிந்தபோதும், தம்பதியர் சற்றும் மனம் தளராது தம் கலைப் பணிகளைத் தொடர்ந்தனர். மனோவின் படங்கள், மஹிமாவின் உரையுடன் அவர்கள் தயாரித்த வாழ்த்து அட்டைகள் நன்கு விற்பனையாகின. அதில் கிடைத்த பணம், நலிந்த வாழ்வினருக்குப் பயனாயிற்று.
மனோகரின் கண்பார்வை சோகத்தை மறந்து அவர்கள் வாழ்ந்த நிலையில், மற்றொரு துயர சம்பவம் காத்திருந்தது. 1972 டிசம்பர் 30. (அவர்களது 9-வது திருமண தினம் கழிந்த நாள்) அன்று மஹிமா கார் ஓட்டி வரும்போது ஏற்பட்ட ஒரு கோர விபத்தின் விளைவாக அவருக்கு தொண்டையின் கீழ் உள்ள எல்லா உறுப்புகளும் செயலிழந்தன. மனோகர் காயங்களுடன் தப்பித்தார். ஆனால் அன்றுமுதல் வாழ்நாள் முழுவதும் மஹிமா சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டியதாயிற்று.
இந்த சம்பவம் அவர்களது வாழ்க்கையில் பெரும் சவாலாகிவிட்டது. ஆனால் மனோவும், மஹிமாவும் சற்றும் மனம் தளரவில்லை. மாறாக, ஆண்டவன் தமக்கு அளித்த ஒரு சோதனையாக ஏற்று, தொடர்ந்து மற்றவர்களுக்கு சேவை செய்தனர். வாழ்வை அரியதொரு கண்ணியத்துடனும் திடமான மனதுடனும் ஏற்றுக்கொண்டனர். தவிர, ‘இன்று புதிதாகப் பிறந்தோம்’ என்ற பாரதியின் வாக்குபோல, தமது திறமையை எழுத்திலும் வடிக்கத் தொடங்கினர். அளிக்கப்பட்ட வாழ்வை ஏற்றுக்கொள்ளும் மன வலிமையை ஆண்டவன் அவர்களுக்கு அளித்திருந்தான். அகவிழியால் தாம் கண்டதை கலை உணர்வோடு இருவரும் எழுத்திலும், படங்களிலும் வடித்தனர். மதுரையின் கோயில் பகுதிகள், ஆட்சியர் அலுவலகம் போன்ற பல கட்டிடங்கள், புது மண்டபத்துச் சிற்பங்கள் இவரது கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று கருப்பு - வெள்ளை சித்திரங்களாக மிளிர்ந்தன. ஆனைமலையும், மற்ற இயற்கை தோற்றங்களும் இவர் பார்வையில் இருந்து தப்பவில்லை. மொத்தத்தில் மதுரையே இவரால் கோடுகளில் சித்தரிக்கப்பட்டது.
மனோகரின் முதல் ஆங்கில நூலான ‘கிரீன் வெல் இயர்ஸ்’, சுயசரிதையாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக, அவர் தன் மனதைப் பறிகொடுத்த மதுரை நகர் பற்றியதாகவே இருந்தது. அதில் மதுரையின் நிகழ்வுகள், சித்திரைத் திருவிழா போன்றவற்றை தமது சொந்த அனுபவங்களுடன் விவரித்திருந்தார். அடுத்த நூல் ‘கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள்’. இது மஹிமாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனையப்பட்டது.
அவரது மூன்றாவது நூல் ‘தைரியத்துக்கு ஒரு கவிதை’, முற்றிலும் மஹிமாவின் வாழ்க்கைப் பாதை. 2007-ல் அவர் பதிப்பித்தது எனது பன்முகத்து மதுரை. இந்நூலில் ஒவ்வொரு பக்கமும், படத்துடனும் பக்கத்தில் விளக்கத்துடனும் இருந்தது. மஹிமாவுக்கு அஞ்சலியாக ‘பட்டாம்பூச்சியும் மஹிமாவும்’ என்ற நூல் அமைந்தது.
இருவரும் தங்கள் உடல், உணர்வு சுமைகளைக் குறித்து குறைகூறாது தமக்குள் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது புராணக்கதை போலவே இருந்தது. 2008-ல் மஹிமா காலமான வரை அவர்கள் இருவரும் கலந்தே, கண்டவர்கள் அதிசயிக்கும்படி எல்லா நிகழ்வுகளுக்கும் சென்றனர். பலவீனமாக்கும் சோக நிகழ்வுகளைப் பாதிக்கவிடாமல், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றி தமது வாழ்க்கையைக் கடத்தினர். அவர்களது நகைச்சுவை உணர்வும், வாழ்வில் நேர்மையான நோக்கும் அவர்களது ஆர்வலர்களையும், நண்பர்களையும் அதிகரித்துக்கொண்டே சென்றன.
கட்டிடக் கலைஞர் சுஜாதா ஷங்கருடன், மனோகர் சேர்ந்து எழுதும் ‘மெட்ராஸ் இன்க்ட்’ ஆங்கில நூல், விரைவில் வெளிவர உள்ளது. அதில் மையால் வரையப்பட்ட 61 கோட்டுச் சித்திரங்களில் இரண்டு, சளைக்காத மன வலிமை கொண்ட அவரது மனைவி மஹிமா வரைந்தவை. 42 படங்களுக்கு சுஜாதா ஷங்கர் உரையெழுதியிருக்க மற்றவைகளுக்கு அவரே உரையாடல் செய்துள்ளார். அதில் எல்லா படங்களும் காலத்தை வென்று நிற்கின்றபோதும், ஒரு படம் தனிச் சிறப்பு பெறுகிறது. கம்பெனி காலத்தில் ‘கார்டில் கட்டிடம்’ என்று அறியப்பட்டு, பின்னர் பாரத் இன்ஷ்யூரன்ஸ் இருக்கையாக மாறிய அதை, வெள்ளைத் தாளில் கருப்பு மையிலும், கருப்புத் தாளில் வெள்ளைக் கோடுகளாலும் அவர் வரைந்திருப்பது காலத்தை வென்று நிற்பதாக காட்டப்படுகிறது. சென்னையின் உருமாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. பாரதி சொல்வதுபோல இச்சித்திரம் காலம் கொன்ற விருந்தாகும்! அதேபோலத்தான் ‘ஸ்பென்சர் கட்டிடமும்’.
சோகத்தை வென்று, துயரங்களை மறந்து, மற்றவர்களின் சேவையில் தன்னை அர்ப்பணித்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த மாமனிதருக்கு கொடுக்கப்படும் ‘பத்மஸ்ரீ’ விருது, அந்த விருதுக்கே பெருமை சேர்க்கிறது என்றே கொள்ளலாம்!
‘வருந்தற்க; வாழ்க்கை முழுவதும் சோகம் நிறைந்திருப்பினும்,
வைகறைப் பொழுது உனது சோகத்திற்காக தனது சிறப்பினை அழித்துக் கொள்ளாது;
வசந்தமும் தாமரை மலர்வதற்கும் அசோக இலை மிளிர்வதற்கும்
தன்னால் நியமிக்கப்பட்ட அழகையும் தடுத்துவிடாது’
என்று சரோஜினி நாயுடு தனது போற்றப்பட்ட கவிதையொன்றில் எழுதினார். அதன் சாரத்தை தமது வாழ்வில் நடத்திக் காட்டியுள்ளவரை எப்படி மறக்க இயலும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT