Published : 29 Jan 2020 04:40 PM
Last Updated : 29 Jan 2020 04:40 PM
விருதுநகர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட 4 ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மற்றும் 8 ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் நாளை நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய 11 ஒன்றியங்களில் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 200பேர் தேர்தெடுக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் 2 வார்டுகளில் சுயேட்சையும், ஒரு வார்டில் அமமுகவும் வென்றிபெற்றன. ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்றியத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பஞ்சவர்ணமும், திமுக சார்பில் காளீஸ்வரியும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வாக்கெடுப்பின்போது அதிமுகவும் தலா 7 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தன. அப்போது, இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
போலீஸார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அரிவாள், கத்தியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் மர்ம நபர்களை தடுத்தபோது சிலர் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. வெங்டேசனுக்கு கையில் வெட்டு விழுந்தது. கலவரம் காரணமாக நரிக்குடியில் ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, சாத்தூர், ராஜபாளையம் ஒன்றியங்களிலும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டது.
மேலும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் காடனேரி ஊராட்சியிலும், விருதுநகர் ஒன்றியத்தில் ஆவுடையாபுரம், சந்தையூர் ஊராட்சிகளிலும், நரிக்குடி ஒன்றியத்தில் ஆலந்தூர், அழகாபுரி, இசலி, ஏ.முக்குளம், என்.முக்குளம் ஆகிய 8 ஊராட்சிகளிலும் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்ட 4 ஒன்றியங்களில் ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மற்றும் 8 ஊராட்சிகளில் ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நாளை (30ம் தேதி) நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT