Published : 29 Jan 2020 12:49 PM
Last Updated : 29 Jan 2020 12:49 PM

'ஸ்டாலின், உதயநிதியால் திமுக தொண்டர்கள் கண்ணீர் சிந்துவார்கள்': அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை

"ஸ்டாலின், உதயநிதி ஆகியோரால் டி.ஆர்.பாலு, நேரு போன்ற திமுக தலைவர்கள் கண்ணீர் சிந்தியது போல திமுக தொண்டர்களும் கண்ணீர் சிந்துவார்கள்" என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த பரபரப்பு கருத்தைத் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது:

எடப்பாடியாரால் மூன்று மணி நேரம் இந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியுமா? என்று கேட்டவர்களுக்கு முன்னால் மூன்று ஆண்டுகள் இந்த ஆட்சியை பல்வேறு திட்டங்களோடு கொண்டு செலுத்தியுள்ளார் முதல்வர். முடியுமா? முடியுமா? என்று கேட்டவர்களுக்கு முன்னால் இவரால் முடியும் என்று அவர்களே பாராட்டும் வகையில் பல்வேறு சாதனைகளை செய்து காட்டியவர் முதல்வர் எடப்பாடியார்.

இந்தியாவிலுள்ள 120 கோடி மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தின் வரைபடம் கடைசியில் இருந்தாலும்கூட நிர்வாகத்தில் தமிழகம் தான் முதலிடம் என்ற பெயரை எடுத்துத் தந்துள்ளார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் மீது இல்லாத கதைகளைக் கட்டவிழ்த்து வருகிறார் திமுகவின் தலைவர் ஸ்டாலின். கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வதில் கருணாநிதிக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் உள்ளார்.

புள்ளி விவரங்களை சேகரித்து தான் மத்திய அரசு நல்லாட்சி விருதினை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழக முதல்வர் பிறவியிலேயே ஒரு விவசாயி ஆக இருந்து வந்தவர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு காலில் செருப்பு இல்லாமல் நமது முதல்வர் விவசாயம் செய்வதை நாட்டு மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நமது முதல்வரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே தங்கியிருந்த அவர் எவ்வாறு விவசாயியாக முடியும்.
ஆனால் தன்னை ஒரு விவசாயி எனக் கூறிக்கொண்டு கரும்புக்காட்டில் சிமெண்ட் ரோடு அமைத்து, ஷூ அணிந்து செல்வதை மக்களே பார்த்து சிரிப்பாய் சிரித்தனர்.

ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாது. ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியவருக்கும் விவசாயம் பற்றித் தெரியாது.
திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று இதுவரை ஒரு லட்சம் தடவை ஸ்டாலின் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கேட்டு திமுக தொண்டர்களே சலித்துப் போய்விட்டனர்.

இதுவரை இந்த அரசுக்கு எதிராகப் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களைக் கூறி இதுவரை 32,000 போராட்டங்களை ஸ்டாலின் நடத்தியுள்ளார். ஆனால் நமது முதல்வர் இந்த அரசுக்கு எதிராக எத்தனை தடைக்கற்கள் வந்தாலும் அதனைத் தகர்த்து எரிந்து தமிழகத்தை முதன்மை இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் திமுகவின் தலைவர் ஸ்டாலின் விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்லி அரசியல் நாகரிகத்தை தாண்டிப் பேசி வருகிறார். அவர் அடிக்கப் போவது மத்திய அரசையா? அல்லது ஆய்வுசெய்த அரசு அதிகாரிகளையா? அல்லது இந்த ஆட்சியை விரும்பும் ஏழரை கோடி மக்களையா? இதன்மூலம் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற இலக்கணத்தை இழந்துவிட்டார்.

30 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு உண்டா? இந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரும் துணை முதல்வரும் சிறப்பான ஆட்சி செய்து வருகின்றனர்.

இதில் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது பாதிப்பு உண்டா? ஆனால் திமுக ஆட்சியில் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தாடி வைத்தவர்களைத் தீவிரவாதி என்று சொன்னார்கள். திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டதை சொல்லிக்கொண்டே போகலாம்.

குடியுரிமை சட்டத்தை திசைதிருப்பும் வகையில் இஸ்லாமியர்கள் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார். நமது பிரதமர் கூட இந்த குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குடியுரிமையைப் பறிக்காது. குடியுரிமையை கொடுக்கும் சட்டமாகும். சென்சஸ் வேறு, என்பிஆர் வேறு என்று கூறியுள்ளார்.

ஜ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம் என்பது சாதாரண நிகழ்வு. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு இடமாற்றம் செய்வது என்பது காலங்காலமாக நடந்து வரக்கூடிய ஒன்று. எந்த அதிகாரியும் ஒரே இடத்தில் பணி செய்வது கிடையாது. திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு துணை போகவில்லை என்ற காரணத்தினால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் எங்கள்மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார் நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். திமுகவில் உள்ள சொத்துக்கள் வெளிய போகக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலினை உள்ளே புகுத்தி உள்ளனர்.

சமீபத்தில், டி.ஆர்.பாலு , கே.என்.நேரு ஆகியோர் படத்தை போட்டு கண்ணீர் வடிப்பது போல கார்ட்டூன் வெளியாகியிருந்தது. திமுகவில் உள்ள அனைவருக்கும் இதே நிலைதான் உதயநிதி மற்றும் ஸ்டாலினால் திமுக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கும் நிலை வரும். திமுகவில் தொண்டர்கள் முன்னேற்றம் அடைய முடியாது.

ஆனால் இந்த இயக்கத்தில் நமது முதல்வர் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆகியுள்ளார். அதேபோல் நமது துணை முதல்வரும் இளைஞரணிச் செயலாளராக இருந்து படிப்படியாக உயந்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x