Published : 29 Jan 2020 07:29 AM
Last Updated : 29 Jan 2020 07:29 AM
புதிதாக விண்ணப்பித்த 90 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் இரா.காமராஜ், “தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 233 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 139 மனுக்களில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 838 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரியான தகவல்கள், ஆவணங்கள் சேர்க்கப்படாத 48 ஆயிரத்து 450 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. மீதமுள்ள மனுக்களையும் விரைவாக பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகளுடன் கைபேசி எண்ணை இணைக்கும் பணி 99.51 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது” என்றார்.
மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் மண்டல உதவி ஆணையர்களின் பணி களை ஆய்வுசெய்த அமைச்சர், பொது விநியோகத் திட்ட கிடங்குகள், அங்காடிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர ஒதுக்கீடு, இயக்கம் மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங் ஆர்.ஷவான், உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் பிரதீப் வி.பிலிப் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT