Published : 28 Jan 2020 04:59 PM
Last Updated : 28 Jan 2020 04:59 PM

திண்டுக்கல்லில் தேஜஸ் ரயில் நின்று செல்ல பரிந்துரை: தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தகவல்

திண்டுக்கல்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது, என தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.

திண்டுக்கல்- சேலம் இடையே உள்ள ரயில் நிலையங்கள், ரயில்வே பாதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் இன்று காலை திண்டுக்கல் ரயில்நிலையம் வந்தார். திண்டுக்கல் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர், இங்கிருந்து சேலம் வரை உள்ள ரயில்நிலையங்களை ஆய்வுசெய்யும் பணிகளைத் தொடங்கினார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் இருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை – நாகர்கோவில் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் 2021 மார்ச் க்குள் நிறைவடையும். பழநி வழியாக கோயம்புத்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிற்கவேண்டும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நிற்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னைக்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தென்னக பொதுமேலாளர் ஜான்தாமஸிடம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் ரயில்நிலையம் ஆய்வை தொடர்ந்து சேலம் வழித்தடத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களையும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x