Published : 27 Jan 2020 12:55 PM
Last Updated : 27 Jan 2020 12:55 PM
தமிழகத்தை சாலை விபத்தில்லா மாநிலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிக் காட்டுவார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகமெங்கும் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பாதுகாப்பு வார விழா கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணி முடியும்வரை நடந்தார்.
இதில் மதுரை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், பேரையூர் உதவி கோட்ட பொறியாளர் காமராஜ், திருமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் சுகுமார், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முத்தையா, வருவாய் கோட்டாட்சியர் பூர்ண லதா, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மதியழகன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 1000-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியானர்களிடம் கூறியதாவது:
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. ஆதலால் சாலை விபத்துகளைக் குறைக்கும் வண்ணம் தொடர்ந்து முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வருகின்றார்.
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை மத்திய அரசு கணக்கிட்டது. அதில் 29 மாநிலங்களில் தமிழகத்தில் தான் சாலை விபத்து குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது
தமிழகத்தில் தான் தரமான சாலைகள் உள்ளன. எந்த குக்கிராமம் எடுத்துக்கொண்டாலும் சாலைகள் தரமுடன் உள்ளது. இதன் மூலம் வாகனங்களில் செல்வோர் எந்த விபத்தும் இல்லாமல் சிரமமின்றி செல்கின்றனர்
சாலை விபத்து மூலம் எந்த உயிர் இழப்பும் ஏற்படக் கூடாது என்பற்காகவே, சாலை விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக முதல்வர் கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறார்.
சமீபத்தில்கூட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் சாலை விபத்து குறைவாக உள்ளது. தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கமாகும். ஆகவே வாகனங்களில் செல்வோர் எல்லாம் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
ஏனென்றால் உங்களை நம்பி குடும்பம் உள்ளது. அதை நினைத்துக்கொண்டு நிதானமாகச் சென்றாலே விபத்து நிகழாது" என்று கூறினார்.
.அதனைத்தொடர்ந்து பேரணியாக செல்லும்போது பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து சாலை விதிகளை பின்பற்றுமாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT