Published : 22 Jan 2020 07:47 AM
Last Updated : 22 Jan 2020 07:47 AM
எண்ணெய் வளம் குறைவாக இருப்பதால் பெட்ரோலை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 15-ம் தேதி வரை எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புகுறித்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
‘சக்ஷம்-2020’ என்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் (பிசிஆர்ஏ) மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
பெட்ரோலிய பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம்இடத்தில் உள்ளது. உலக மக்கள்தொகையில் பாதி அளவு மக்கள்தொகை இந்தியாவிலும், சீனாவிலும் உள்ளனர். இந்த இரு நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள்அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, பெட்ரோலிய பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்தி சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். போக்குவரத்துத் துறையில்தான் அதிக அளவு பெட்ரோல் செலவாகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது போக்குவரத்துக்கு தனி வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மெட்ரோ ரயில், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த 2015-16-ம் ஆண்டு 185 மில்லியன் டன் அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இது 2018-19-ம் ஆண்டில் 210 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. எண்ணெய் வளம்குறைவாக இருப்பதால் பெட்ரோலை சிக்கனமாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
விழாவில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன், மண்டல சேவைகள் பிரிவு செயல் இயக்குநர் அரூப் சின்ஹா, பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் இயக்குநர் எஸ்.பி.செல்வம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவின் தலைவர் இந்தர்ஜித் சிங், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொதுமேலாளர் (எல்பிஜி) வி.எஸ்.சக்ரவர்த்தி, கெயில் நிறுவனத்தின் தலைமை மண்டல பொதுமேலாளர் எம்.கே.பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT