Published : 21 Jan 2020 08:45 AM
Last Updated : 21 Jan 2020 08:45 AM
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக உணவு உற்பத்தியை காவு கொடுத்துவிடக் கூடாது என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு செய்துள்ள மாற்றம் தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு காவிரிப்படுகையில் மேற் கொள்கின்ற ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என கூறியிருப்பதன் மூலம் எந்த வகையிலாவது இத்திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்கின்ற மத்திய அரசின் தன்முனைப்பை இந்த அரசாணை உணர்த்துகிறது.
ஏற்கெனவே மீத்தேன் திட்டம் ஆய்வுக்காக அனுமதிக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீத்தேன் திட்டத்துக்கு தற்காலிக தடை விதித்ததுடன், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து நிரந்தர தடையும் விதித்தார். அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
தற்போது, ஹைட்ரோகார்பன் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மத்திய அரசு இத்திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக எடுத்துவரும் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்துகின்ற திட்டங்களை செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கின்ற மத்திய அமைச்சர்கள், இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை, சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என முடிவெடுப்பது கண்டனத்துக்குரியது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக உணவு உற்பத்தியை காவு கொடுத்துவிடக் கூடாது. மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்து, பழைய நடைமுறையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். இச்சட்டத்தை ரத்து செய்யவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் செயல்படுத்த தடை செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT