Published : 21 Jan 2020 07:47 AM
Last Updated : 21 Jan 2020 07:47 AM
வன்முறையில் ஈடுபடுவதாக வீண்பழி சுமத்தி, மக்கள் போராட்டங்களை மோடி அரசு ஒடுக்க நினைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் லட்சமாவது பிரதி வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. லட்சமாவது பிரதியை சீதாராம் யெச்சூரி வெளியிட, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
இன்று உலகம் சந்தித்து வரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இந்த அறிக்கை தீர்வு சொல்கிறது. உலக அளவில் 2008-ல் பொருளாதார நெருக்கடி தொடங்கியபோது அதைத் தீர்க்க வழியின்றி தவித்த முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள், மார்க்ஸ் எழுதிய நூல்களைத் தேடினர். அந்த அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மார்க்ஸ்.
இந்தியர்களுக்கு அரசியல் சட்டம்தான் ஒரே புனித நூல். நமது அரசியல் சாசனப்படி இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு. அதைப் பாதுகாக்கவே நாம் போராடுகிறோம். ஆனால், ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளை பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மூலம் என்ஆர்சியை செயல்படுத்தும் பணியை மோடி அரசு தொடங்கியுள்ளது.
குடியுரிமைச் சட்டம், என்சிஆர், என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக நாடெங்கும் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். அதை காவல்துறை மூலம் மத்திய பாஜக அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் ஒடுக்க நினைக்கின்றன. அவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு, வன்முறையில் ஈடுபடுவதாக வீண்பழி சுமத்தி மக்கள் போராட்டங்களை ஒடுக்க மோடி அரசு நினைக்கிறது. இதை நாம் முறியடிக்க வேண்டும். மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி பேசினார்.
இவ்விழாவில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன், நூல் மொழிபெயர்ப்பாளர் மு.சிவலிங்கம், பாரதி புத்தகாலய நிர்வாகி க.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT