Published : 20 Jan 2020 10:27 AM
Last Updated : 20 Jan 2020 10:27 AM

மலையேற்றம் சென்ற பெண் காட்டுயானை தாக்கி உயிரிழப்பு

கோவை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற பெண், யானை தாக்கி உயிரிழந்தார். வனத் துறையின் அனுமதி பெறாமல் பயிற்சியில் ஈடுபட்டதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (40). இவர்கள் இருவரும், சில நண்பர்களுடன் இணைந்து கவுண்டம்பாளையம் அருகேயுள்ள பாலமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

பாலமலை-குஞ்சூர் சாலை வழியாக பசுமணி பகுதியில் சென்றபோது, ஒற்றை யானை வந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். எனினும், தப்பியோட முயன்ற புவனேஸ்வரியை காட்டு யானை தூக்கி வீசியும், காலால் மிதித்தும் கொன்றது. இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வனத் துறையினர் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வனத் துறை யினர் கூறும்போது, "வனப் பகுதிகளுக்குள் வனத் துறையினரின் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது. சம்பவம் நிகழ்ந்த பாலமலை வனப் பகுதி, அடர்ந்த காட்டுப் பகுதியாகும். இங்கு காட்டு யானைகள் உலவுவதால், நாங்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மக்களைக்கூட, இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளோம். இந்த நிலையில், வனத் துறையினரின் அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்களை காட்டு யானை துரத்தியுள்ளது. யானையிடம் சிக்கிய பெண் உயிரிழந்துள்ளார். வனத் துறையினரின் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்குச் செல்வோர் மீதும், வனப் பகுதிக்குள் நுழைவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x