Published : 20 Jan 2020 08:18 AM
Last Updated : 20 Jan 2020 08:18 AM

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்; 66 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது: பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல்

சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அருகில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 66.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. செவிலியர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார்கள் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

நாடுமுழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பெற்றோர் ஆர்வமாக தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். முகாமில் அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட் மற்றும் பொம்மைகள் கொடுத்தும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பொங்கல் கொண்டாட குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதால்,பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த 1,652 மையங்கள் மூலம் சொட்டுமருந்து வழங்கும் பணி நடைபெற்றது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 1,000 நடமாடும்குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் மூலமாக பணியாளர்கள் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வருபவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னதாக காலை 7.30 மணி அளவில் சென்னை அடையாறு அருகே பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி 10 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெறுவதால், இன்றைக்கு தமிழகம் போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை தமிழகத்தில் தொடர வேண்டும். பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோத்து செயல்படுவோம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

இந்தியா தொடர்ந்து 5-வது ஆண்டாகவும் தமிழகம் 16-வதுஆண்டாகவும் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளன. ஆண்டுக்கு இருமுறை போடப்பட்டு வந்த போலியோ சொட்டு மருந்து கடந்த ஆண்டு முதல் ஒருமுறையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் போலியோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுதான் இந்தியாவுக்கு பெரிய சவாலாக உள்ளது. அந்த நாடுகளில் போலியோ ஒழிக்கப்பட்டால், இந்தியாவிலும் போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்திவிடலாம்.

தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளில், 66.41 லட்சம் (94.2%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6.98 லட்சம் குழந்தைகளில் 6.53 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துபோடப்பட்டது. இன்னும் ஒருவாரத்துக்கு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்துபோட்டுக் கொள்ளலாம். செவிலியர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x