Published : 20 Jan 2020 08:16 AM
Last Updated : 20 Jan 2020 08:16 AM

சென்ட்ரலில் இளம்பெண்ணால் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

சென்னை

சென்ட்ரலில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் புகைப்படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜானே போஸ்லே. இவரது மனைவி ரதிஷா. இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஜான். கடந்த 12-ம் தேதி மெரினா கடற்கரையில் ராதா (23) என்ற இளம்பெண், ரதிஷாவிடம் அறிமுகமாகி, தான் டிவி சீரியல்களில் குழந்தைகளை நடிக்க வைத்து வருவதாகவும் உங்கள் குழந்தையையும் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம் அருகில் ரதிஷாவை வரச்சொல்லி குழந்தையை சென்னை அரசு பொது மருத்துவமனையில் காண்பித்து வருவதாக வாங்கிச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தையை கடத்திச் சென்ற இளம் பெண்ணின் உருவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து போலீஸார் அவரை தேடி வருகின்றனர். குழந்தையின் புகைப்படமும், அவரை கடத்திச் சென்ற இளம்பெண்ணின் புகைப்படமும் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்மாநில போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் பற்றி தகவல் கிடைத்தால் தங்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை போலீஸார் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 99401 01363 எண்ணிலும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x