Published : 20 Jan 2020 07:46 AM
Last Updated : 20 Jan 2020 07:46 AM

பவானி ஆற்றங்கரையில் ‘ஸ்பெஷல் ஷவர்பாத்'- பீய்ச்சியடிக்கும் நீரில் குழந்தைகள்போல துள்ளிக் குதித்து நீராடும் யானைகள்: மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டுமென அடம்

கோவை

பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஷவர்பாத்தில் பீய்ச்சியடிக்கும் நீரில் குழந்தைகள்போல துள்ளிக்குதித்து நீராடும் யானைகள், மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டுமென அடம் பிடிப்பதாக பாகன்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில், கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் இந்த முகாம் வரும் 31-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன.

இங்கு யானைகள் தினமும் குளிக்க பவானி ஆற்றங்கரையில் மின் மோட்டார்கள் மூலம் இயங்கும் ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில அடி தூரத்தில் ஓடும் ஆற்றில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, அவை யானைகள் மீது மேலிருந்து கீழ் நோக்கி பீய்ச்சியடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் இக்குளியலைப் பெரிதும் விரும்புகின்றன. அவை நீராட அழைத்துச் செல்லும் நேரத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. நீராட அழைத்துச் செல்லப்பட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தண்ணீரில் விளையாடிக் களிக்கின்றன. மேலிருந்து சிறு அருவிபோல கொட்டும் நீரில் நனைந்தபடி, குளியல் மேடையில் உருண்டு புரண்டு வெகு உற்சாகமாகக் குளிக்கின்றன.

விளையாடிய யானைகள்

மேலிருந்து விழும் நீர் மட்டுமின்றி, குழாய்கள் மூலமும் யானைகள் மீது தண்ணீரை பாகன்கள் பீய்ச்சியடிகின்றனர். சில யானைகள் உற்சாக மிகுதியில் பாகன்களிடம் இருந்து குழாய்களைப் பிடுங்கி, அதில் வழியும் நீரை குடிக்கும் வகையில் வாய்க்குள் வைத்து விளையாடுகின்றன. சில யானைகள் அருகே நிற்கும் பாகன்கள் மீதே தண்ணீரைப் பீய்ச்சியடிக்கின்றன.

குளித்து முடித்து திரும்பிச் செல்லும்போதும், குழந்தைகள்போல அடம்பிடித்து, பாகன்கள் உத்தரவை மீறி மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் சென்று நீரில் நனைந்தபடி உள்ளன.

இது குறித்து யானைப்பாகன்கள் கூறும்போது, “வெப்ப உடலைக் கொண்டுள்ள யானைகள் இயல்பாகவே நீரில் வெகு நேரம் உடலை நனைத்து குளிக்கும் இயல்புடையவை. காட்டில் வாழும் யானைகள் இதற்காக வனக் குட்டைகளைத் தேடி செல்லும். ஒரு சில ஊர்களில் மட்டுமே ஆறு போன்ற நீர்நிலைகள் இருக்கும் என்பதால், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பெரும்பாலும் அங்குள்ள கிணற்று நீரிலேயே, குறைந்த நேரத்தில் குளிக்க வைக்கப்படுகின்றன. இது யானைக்கு போதாது.

இங்குள்ள முகாம் பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளதால், அதன் இயற்கையான இயல்பின்படி நீரில் விளையாடி மகிழ்கின்றன யானைகள். அவை உற்சாகமாக நீராடுவது எங்களுக்கும் மிகுந்த மகிழ்வை தருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x