Published : 17 Aug 2015 09:15 AM
Last Updated : 17 Aug 2015 09:15 AM

என்எல்சி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: உண்ணாவிரதம் இருந்த 8 பேர் மயக்கம்

என்எல்சியில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு 43 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 20-ம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 14-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஐஎன்டியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிலாளர்கள் தொடங்கினர். இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் மத்தியாஸ், சண்முகம், புஷ்பராஜ், சின்னதுரை உள்ளிட்ட 8 பேர் மயங்கி விழுந்தனர். இவர்கள் என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று உண்ணாவிரத பந்தலுக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் அனை வரும் நிரந்தர தொழிலாளர்களின் பேராட்டத்துக்கு ஆதரவு தெரி விக்க வேண்டும். என்எல்சி பிரச்சி னையில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று காலை நெய்வேலி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் என்எல்சி தலைவர் சுரேந்தர மோகன், இயக்குநர்கள் சரத்குமார் ஆச்சார்யா, ராகேஷ்குமார், பூபதி, ராஜகோபால், சுபீர்தாஸ் மற்றும் தொழிற்சங்க தரப்பில் அதொஊச உதயகுமார், அபு, தேவானந்தன், அல்போன்ஸ், தொமுச சார்பில் ராசவன்னியன், திருமாவளவன், அண்ணாதுரை, தரன், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் முருகன், ராஜகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன் கூறும்போது, "மற்ற பொதுத்துறை நிறுவனங்களைவிட அதிமாக ஊதிய உயர்வு கொடுக்க முன்வந்துள்ளோம். ஆண்டுக்கு ரூ.1330 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது நிர்வாகம் கொடுக்க உள்ள ஊதிய உயர்வால் ரூ.143 கோடி கூடுதலாக செலவு ஏற்படும். நிறுவனம் மற்றும் நாட்டுநலன் கருதி தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். 3 நாட்களுக்குள் பணிக்கு திரும்பும் தொழிலாளருக்கு மாதம் ரூ.500 அதிகமாக சம்பளம் தரப்படும்" என்றார்.

இதுகுறித்து தொமுச பொதுசெயலாளர் ராசவன்னியன் கூறும்போது, "பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. போராட்டம் தொடர்ந்து நடை பெறும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x