Published : 17 Jan 2020 05:11 PM
Last Updated : 17 Jan 2020 05:11 PM

இந்து தமிழ் செய்தி எதிரொலி: பேஸ்புக் பார்த்துக்கொண்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுநரின் உரிமம் ரத்தாகிறது- பணியில் இருந்து விடுவிப்பு

அலைபேசியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ராமகிருஷ்ணன்.

திண்டுக்கல்

செல்போனில் பேஸ்புக் பார்த்துக்கொண்டு பயணிகள் அச்சப்படும் வகையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ராமகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறையால் வரும் திங்கள்கிழமை அலுவலகம் தொடங்கும் நாளில் ராமகிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமத்தை பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க தனியார் பேருந்து உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுனர் ராமகிருஷ்ணன் என்பவர், அலைபேசியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு வாட்ஸ் அப், பேஸ்புக் பார்த்துக்கொண்டே அதிகவேகமாக பேருந்தை இயக்கினார்.

இதை பயணிகள் கண்டித்தும் ஓட்டுனர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பயணிகள் அச்சத்தில் பயணம் மேற்கொண்டனர். ஓட்டுனர் அலைபேசியை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சாலையை பார்த்து பேருந்தை இயக்கியதை, பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவு செய்தார். இது வைரலாக பரவியது.

இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழில் செய்தியும் வெளியானது. இதையடுத்து உடனடியாக தனியார் பேருந்து நிறுவனத்தை தொடர்பு கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியமாகவும், பயணிகள் அச்சப்படும்வகையிலும் பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் ராமகிருஷ்ணனில் ஓட்டுனர் உரிமத்தை வரும் திங்கள்கிழமை பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக அரசு விடுமுறை என்பதால், வரும் திங்கள்கிழமை ஓட்டுனர் ராமகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமத்தை பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டுனர் ராமகிருஷ்ணனை மீண்டும் பேருந்தை இயக்குவதற்கு அனுமதிக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ராமகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்தில் ஒப்படைத்த பிறகு, அவரின் ஓட்டுனர் உரிமம் (டிரைவில் லைசென்ஸ்) ரத்துசெய்யப்படும். இதன்மூலம் இனி அவர் கனரகவாகனங்களை இயக்க முடியாது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x