Published : 13 Jan 2020 05:25 PM
Last Updated : 13 Jan 2020 05:25 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் இட ஒதுக்கீட்டையும் மீறி பெண்களுக்கு ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளை மாவட்ட திமுக தலைமை வாரி வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் 7 ஒன்றியங்களில் பெண்கள் ஒன்றியத் தலைவராக இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெண்களுக்குட்பட்ட 7 ஒன்றியங்களில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, கொடைக்கானல் என்ற நான்கு ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது.
பழநி ஒன்றியம் பொது பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஒரு ஆண் ஒன்றிய தலைவராக வாய்ப்பு இருந்தநிலையில் ஈஸ்வரி என்ற பெண்ணை ஒன்றிய தலைவராக்கியது திண்டுக்கல் மாவட்ட திமுக.
இதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் எஸ்.சி(பொது) பிரிவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒன்றியத் தலைவர் பதவிபெற வாய்ப்பிருந்த நிலையிலும் சத்யபுவனா என்ற பெண்ணை ஒன்றிய தலைவராக்கியுள்ளது திமுக.
சாணார்பட்டி ஒன்றியம் எஸ்.சி.,(பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டநிலையில் திமுக சார்பில் ஆண் ஒருவர் ஒன்றிய தலைவராக வாய்ப்பிருந்தநிலையில் பழனியம்மாள் என்ற பெண்ணை ஒன்றிய தலைவராக்கியுள்ளது திண்டுக்கல் மாவட்ட திமுக.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக வென்ற 9 ஒன்றிய தலைவர் பதவிகளில் பெண் ஒதுக்கீட்டில் 4 பதவிகளையும், பொதுஒதுக்கீட்டில் 3 பதவிகளையும் பெண்களே பெற்றுள்ளனர். மீதம் உள்ள பொது ஒதுக்கீட்டில் உள்ள ஒன்றியங்களில் திமுகவை சேர்ந்த ஆண்கள் சிவகுருசாமி(ரெட்டியார்சத்திரம்), ராஜா(திண்டுக்கல்) ஆகியோர் மட்டுமே ஒன்றிய தலைவர்களாகியுள்ளனர்.
துணைத்தலைவர் பதவிகளிலும் பெண்கள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக வென்ற 9 ஒன்றியங்களில் தலைவர் பதவிகளை பெரும்பாலன இடங்களில் பெண்கள் பெற்றநிலையில், துணைத்தலைவர் பதவிகளிலும் பெண்களுக்கு தாராளம் காட்டப்பட்டுள்ளது.
துணைத்தலைவர் பதவிகளுக்க இடஒதுக்கீடு இல்லை. எனவே பெரும்பாலும் இந்த பதவிகளுக்கு ஆண்களே அதிகம் போட்டியிடுவது வழக்கம். ஆனால் திமுக வென்ற 9 ஒன்றியங்களில் துணைத்தலைவர் பதவிகளையும் பெரும்பாலான பெண்களுக்கு திண்டுக்கல் மாவட்ட திமுக வழங்கியுள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணைத்தலைவராக டி.ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். ஆத்தூர் ஒன்றிய துணைத்தலைவராக ஹேமலதா, திண்டுக்கல் ஒன்றிய துணைத்தலைவராக சோபியாராணி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவராக காயத்திரிதேவி, கொடைக்கானல் ஒன்றிய துணைத்தலைவராக முத்துமாரி ஆகியோர் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக வென்ற 9 ஒன்றியங்களில் 5 ஒன்றியங்களில் திமுக வைசேர்ந்த பெண்கள் துணைத்தலைவர் பதவியை பெற்றுள்ளனர்.
இதில் கொடைக்கானல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவி என இரண்டு பதவிகளையும் பெண்களுக்கு திமுக வழங்கியுள்ளது. ஒன்றிய தேர்தல்களில் மட்டும் திமுகவை சேர்ந்த தலைவர்,
துணைத்தலைவர் என 12 பெண்கள் பதவிக்கு வந்துள்ளனர். திமுக வென்ற 9 ஒன்றியங்களில் தலைவர் பதவியை 7 பேர், துணைத்தலைவர் பதவியை 5 பேர் என பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீடு 50 சதவீதம் பெண்களுக்கு இருந்தபோதும், இதைவிட அதிகமாக திண்டுக்கல் மாவட்ட திமுக பெண்களுக்கு இடங்களை அளித்துள்ளது.
அதிமுக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 ஒன்றியங்களில் நிலக்கோட்டை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய 3 ஒன்றியங்களை அதிமுக வென்றதால், அதிமுக வைசேர்ந்த 3 பெண்கள் ஒன்றிய தலைவர்களாகியுள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியம் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டநிலையில் அதிமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி ஒன்றிய தலைவராகியுள்ளார்.
இதில் அதிமுக கைப்பற்றிய வேடசந்தூர், வடமதுரை ஆகிய ஒன்றியத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் பதவிகளுக்கு அதிமுகவை சேர்ந்த பெண்கள் தேர்வாகியுள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் துணைத்தலைவராக தேமுதிகவை சேர்ந்த மணிமேகலை தேர்வாகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 6 பெண்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை பெற்றுள்ளனர். தே.மு.தி.க., வை சேர்ந்த ஒரு பெண் துணைத்தலைவராகியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT