Published : 13 Jan 2020 07:59 AM
Last Updated : 13 Jan 2020 07:59 AM
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மரணத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிக்கை மூலம் அளித்துள்ள பதில் வருமாறு:
கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் காவல்துறை அந்த இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டதுடன், முதல்வர் உத்தரவின்பேரில் காவல்துறை இயக்குநரே நேரில் சென்றும் விசாரணை நடத்தினார். அதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக மறுநாளே (ஜன.9) சட்டப்பேரவையில் முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து 2 நாட்களாக ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், நேரடியாகச் சென்று பெயரளவில் ரூ.5 லட்சத்தை அக்குடும்பத்துக்கு வழங்கிவிட்டு, “காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை, இதில்தான் தமிழ்நாடுமுதலிடம்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டு, ஒரு காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும் யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கவில்லை என்பதும் காவல் துறையினருக்கும் தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். அதுபற்றி திமுக தலைவர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமே இல்லை.
திமுக ஆட்சியில் 7-1-2010 அன்று பிற்பகல் 2 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில் அப்போதைய திமுக அமைச்சர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் கண்ணெதிரே வழியில் கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேலின் உயிரைக் காப்பாற்ற முனையாமல், அவர் தண்ணீர் கேட்டதைக்கூட செவிசாய்க்காமல் வேடிக்கை பார்த்ததை தொலைக்காட்சிகள் மூலமாக மக்கள் அனைவரும் பார்த்தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். ஆனால், இப்போது சாதாரண விபத்தில் அடிபட்டு காயமடைந்தவர்களைக்கூட நமது அமைச்சர்கள் தங்களது காரிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சம்பவமும்பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.
29-8-1997 அன்று மதுரை மத்திய சிறையில் பணிபுரிந்த ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதுபோல 17-11-1999 அன்று சென்னை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை அதிகாரிகள் மீது தண்டனைக் கைதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் துணை சிறைத் துறை அதிகாரி ஜெயக்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். சிறையில் ஒரு அதிகாரியை அடித்துக் கொல்லும் அளவுக்கு ஆயுதங்கள் எவ்வாறு உள்ளே சென்றது என்பதுகூட தெரியாமல் அப்போதைய திமுக அரசு இருந்துள்ளது.
இதுபோல பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து திமுக தலைவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவு, மக்கள் சிரிக்கத்தான் வகை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT