Published : 10 Jan 2020 08:20 PM
Last Updated : 10 Jan 2020 08:20 PM
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை சொன்னபடி நடக்கவில்லை. திமுக மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்பும் இல்லை என திடீரென காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி விடுத்த கூட்டறிக்கை:
“தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்குப் புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT