Published : 10 Jan 2020 07:29 PM
Last Updated : 10 Jan 2020 07:29 PM
புதுச்சேரியில் முதல் முறையாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். நீர் பங்கீட்டில் திருப்தி அளிப்பதாக கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழக்கமான கூட்டம் டெல்லி, பெங்களூருவில் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை புதுச்சேரியில் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருந்தது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை காரைக்கால் பிராந்தியம்தான் காவிரி நீரைப் பெறக்கூடிய பகுதியாக உள்ளது. அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையச் செயலர் நீரஜ்குமார் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இன்று காரைக்கால் வந்தனர். இக்குழுவில் கர்நாடகா முதன்மைச் செயலர் ராகேஷ்சிங், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மணிவாசன், புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கேரள துணை தலைமைப் பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
இக்குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் நல்லாத்தூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீர் வரக்கூடிய நண்டலாறு, நாட்டாறு உள்ளிட்ட ஆறுகளை நேரில் பார்வையிட்டனர். அதன்பிறகு புதுச்சேரி வந்தனர்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று புதுச்சேரியில் கூடுவதற்கு முன்பு முதல்வர் நாராயணசாமியை இக்குழுவினர் சந்தித்தனர். அதையடுத்து கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான காவிரி நீர் பங்கீடு, பருவமழைப் பொழிவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்போ, கூட்ட விவரங்களோ தெரிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "முதல் முறையாக புதுச்சேரியில் இக்கூட்டம் நடந்தது. கண்காணிப்புப் பணியை மட்டுமே இக்குழு செய்யும். நதிநீர் பங்கீடு தொடர்பாக 4 மாநிலங்களும் இக்காலகட்டத்தில் திருப்தி தெரிவித்தன. புதுச்சேரியைப் பொறுத்தவரை 7 டிஎம்சி கிடைத்தது. அனைத்து மாநிலங்கள் தரப்பிலும் குறைகள் ஏதும் பெரிய அளவில் தெரிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT