Published : 10 Jan 2020 06:18 PM
Last Updated : 10 Jan 2020 06:18 PM

மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பொருட்களைப் பெற்ற மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து விற்பனை நிறுவனங்கள் தங்களின் மருந்து விற்பனைக்காக மருத்துவர்களைக் கவர பல வகைகளில் அவர்களுக்கு சகாயம் செய்வார்கள். அது பணம், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணம், பரிசுப் பொருட்கள், வாகனங்கள், கிளினிக்கைத் தயார் செய்து தருவது உள்ளிட்ட பல வகைகளில் விருந்தோம்பல் இருக்கும்.

இவ்வாறு தங்கள் தொழிலுக்காக மருத்துவர்களுக்கு விருந்தோம்பலுக்குச் செலவழித்ததாக கூறப்பட்ட தொகையான ரூ.42 லட்சத்து 81 ஆயிரத்து 986-க்கு வரி விதிக்கக் கூடாது என ஃபோர்ட்ஸ் லேப் இந்தியா லிமிடெட் தொடர்ந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வருமான வரித் துறைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து ஃபோர்ட்ஸ் மருந்து நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் மருந்து விற்பனைக்காக மருந்து நிறுவனங்கள் கையாளும் லஞ்ச முறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

''இந்தியாவில் தினமும் 50 மில்லியன் நோயாளிகளுக்கு 1 மில்லியன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நவீன மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குவதால் வெளிநாட்டினரும் கூட நம் நாட்டிற்குக் குறிப்பாக, சென்னைக்கு மருத்துவச் சுற்றுலா என சிகிச்சை பெற வருகின்றனர்.

ஆனால், தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் நம் நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்கிறதா? என்றால் இல்லை. உலக அளவில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள் 33 மில்லியன் டாலர் (ரூ.234 கோடியே 27 லட்சத்து 19 ஆயிரத்து 500) மதிப்பில் இயங்கி வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 389 கோடியாக இருந்த மருந்து நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 015 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய மருந்து நிறுவனங்களின் தேவையில்லாத மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக, டாக்டர்களுக்குத் தங்க நகை, ரொக்கப் பணம், கிரெடிட் கார்டு, இன்பச் சுற்றுலா எனப் பல வழிகளில் லஞ்சம் வழங்குவதாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதேபோல எக்ஸ்ரே, இ.சி.ஜி., என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் அதிக அளவில் டாக்டர்களுக்கு கமிஷன் செல்கிறது. ஆனால் இவ்வாறு தொழில் நடத்தை விதிகளை மீறி டாக்டர்கள் எந்த ஒரு அன்பளிப்பும், லஞ்சமும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து பெறக்கூடாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், இந்த எச்சரிக்கைக்கு எந்தப் பலனும் இல்லை. நடத்தை விதிகளை டாக்டர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர். திரைமறைவில் நடந்து வரும் இந்த மருத்துவ முறைகேடுகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தங்களின் மருந்து விற்பனையை அதிகப்படுத்துவதற்காக பல வழிகளில் லட்சக்கணக்கில் செலவழித்த தொகையை தங்களின் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனத்தின் கோரிக்கை அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு மருந்து நிறுவனங்களிடம் மருத்துவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை, அதிக விலைக்குப் பொதுமக்களிடம் விற்க தங்க நகை, கிரெடிட் கார்டு, ரொக்கப் பணம் எனப் பல வழிகளில் லஞ்சமாகக் கொடுத்ததை வாங்கிப் பலனடைந்த டாக்டர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மனுதாரர் நிறுவனம் தங்களின் மருந்து விற்பனையை உயர்த்துவதற்காக ரூ.42 லட்சத்து 81 ஆயிரத்து 986-ஐ செலவு செய்ததாக கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. நடத்தை விதிகளை மீறி மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்ற மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை செயலர், மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்''.

இவ்வாறு உத்தரவிட்ட கிருபாகரன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு வழக்கை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x