Published : 10 Jan 2020 05:15 PM
Last Updated : 10 Jan 2020 05:15 PM
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்களுக்கான உடல் தகுதித்தேர்வு இன்று (ஜன.10) நடந்தது. இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவே அலங்காநல்லூரில் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் பார்வையாளர்கள் உள்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியைக் காண குவிவார்கள்.
தமிழக அரசும், அலங்காநல்லூர் ஊர் மக்களும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெறும் சிறந்த வீரர், சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு சுற்றிலும், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை அடக்குவோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்றாலே காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உண்டு. அந்தளவுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டியில் பரிசு மழை காத்திருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 17-ம் தேதி நடக்கிறது. ஆன்லைன் பதிவில் 700 காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது. காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் தேர்வு, இன்று காலை அலங்காநல்லூரில் நடந்தது.
இதில், பங்கேற்க நேற்று இரவு இருந்தே மதுரை மட்டுமில்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் குவிந்தனர். அவர்களை ஒழுங்குப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர்கள், இளைஞர்களை பரிசோதனை செய்து, அவர்கள் வயது, உயரம், உடல்வலிமைகளையும், குறைபாடுகளையும் பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்க தேர்வு செய்தனர்.
இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க நேற்று 740 வீரர்கள் தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு 18 வயதில் இருந்தே மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இன்று 21 வயதிற்கு குறைவானவர்கள், ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க தேர்வாகவில்லை.
ஆன்லைன் பதிவு அடிப்படையில் 740 காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா கூறுகையில், ‘‘வீரர்கள், அவர்கள் உயரம், அடை, வயது மற்றும் உடல் வலிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
உடலில் ஏதாவது சர்ஜரி செய்திருந்தாலோ, உடல் உபாதைகள் இருந்தாலோ அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மொத்தம் 740 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT