Published : 10 Jan 2020 02:14 PM
Last Updated : 10 Jan 2020 02:14 PM
சேலத்தை அடுத்த வீராணம் அருகே குழந்தைகளின் பசியைத் தீர்க்க, தனது கூந்தலை விற்று, அதில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு குழந்தைகளின் பசியாற்றிய தாயின் செயல் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
சேலம் வீராணம் அடுத்த வீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சிலரிடம் கடன் வாங்கி செங்கல் சூளை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, 7 மாதத்துக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு பிரேமா (38) என்ற மனைவியும், தர்மலிங்கம் (8), காளியப்பன் (5), குணசேகரன் (3) என 3 குழந்தைகளும் உள்ளனர்.
கணவர் இறந்த பின்னர் வறுமை காரணமாக, பிரேமா செங்கல் சூளை உள்ளிட்டவற்றுக்கு கூலி வேலைக்கு சென்று, குழந்தைகளை பராமரித்து வந்தார். செல்வத்துக்கு கடன் கொடுத்தவர்கள், பிரேமாவிடம் அதனை கேட்டு வந்துள்ளனர். இதனால், கடனை கொடுக்கவும், குழந்தைகளைப் பராமரிக்கவும் போதிய வருமானம் இன்றி அவர் தவித்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பிரேமாவிடம் பணம் இல்லாததால், குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், சவுரி முடி தயாரிக்க (செயற்கை கூந்தல்) முடி வாங்குபவர் வந்துள்ளார். இதையறிந்த, பிரேமா தனது கூந்தலை மழித்து, முடி வாங்குபவரிடம் விற்று, அதில் கிடைத்த சிறு தொகையைக் கொண்டு, குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார்.
இத்தகவலை அறிந்த அவரது நண்பர் ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து உதவி செய்ததுடன், வறுமைக்காக பிரேமா கூந்தலை மழித்துக் கொண்டது குறித்து, முகநூலில் பதிவு செய்தார்.
இது வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, பிரேமாவின் நிலையை அறிந்த சேலம் மாவட்ட நிர்வாகம், பிரேமாவுக்கு விதவை உதவித் தொகை வழங்க உடனடியாக அரசாணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT