Published : 10 Jan 2020 10:23 AM
Last Updated : 10 Jan 2020 10:23 AM

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தருமபுரி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜன.10) வெளியிட்ட அறிக்கையில், "தருமபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், அதேபகுதியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு கல்வியும், ஒழுக்கமும் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்கள் இத்தகைய ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி ஒருவருக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி வளாகத்திலேயே பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த அவர்கள், இதுகுறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டி வந்தனர். ஓரு கட்டத்தில் இரு ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மாணவி, நேற்று தமது உறவினர்களிடம் புகார் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் திரண்டு சென்று, ஆசிரியர்கள் இருவரையும் பிடித்து மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கூடம் என்பது மிகவும் புனிதமான இடம் ஆகும். அதேபோல், ஆசிரியர்களை பெற்றோருக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்திற்கு முன்பாகவும் வைத்து கொண்டாடும் சமுதாயம் நம்முடையது. அத்தகைய பெருமைக்குரிய ஆசிரியர்கள் அதற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் மரியாதைக்குரியவர்களாகவும், முன்னுதாரணங்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் நமக்கு வழிகாட்டும் அனைத்து நூல்களும் ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்கின்றன.

ஆனால், ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களின் செயல், மரியாதைக்குரிய ஆசிரியர் சமுதாயத்திற்கு அவப்பெயர் தேடித்தந்திருக்கிறது. பள்ளியில் அவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தினமும் பள்ளிக்கூடத்திற்கு மது அருந்தி விட்டு வரும் அவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்த போதும் கூட அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாகத் தான் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், பெற்றோரை இழந்து விட்ட அவர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமது பெரியம்மாவின் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையே அந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தவறு செய்துள்ளனர்.

அன்பும், அக்கறையும் காட்ட வேண்டிய ஒரு மாணவியிடம், அரக்கத்தனத்தைக் காட்டிய ஆசிரியர்களின் செயல் மன்னிக்க முடியாதது ஆகும். அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் சின்னமுத்து, லட்சுமணன் ஆகியோர் அப்பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள்.

ஆசிரியர்கள் இருவரையும் கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும் இந்த தீயச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் அத்துமீறல் ஒரு மாணவியிடம் மட்டும் தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறதா? அல்லது வேறு எவரேனும் இவர்களின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இரு ஆசிரியர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பாதுகாப்பான சூழலில் அம்மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x