Published : 10 Jan 2020 10:05 AM
Last Updated : 10 Jan 2020 10:05 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் இதுவரையில் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள்சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்றுமுதல் வரும் 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 14,045 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் பயணம் செய்ய போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களில் மட்டுமின்றி www.tnstc.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.redbus.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் மூலமும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்கள் மூலம் இது வரையில் மொத்தம் 1,30,358 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது.
டிக்கெட்களை முன்பதிவு செய்ய சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 3 இடங்களில் 17 சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு.இளங்கோவன் மற்றும்உயர் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா ஒன்று என மொத்தம் 17 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கென தனி முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு போதியஅளவில் இணைப்பு பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்து 9445014450, 94450 14436 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “பொங்கலையொட்டி மக்கள்சொந்த ஊர்களுக்கு சென்றுவர,மொத்தம் 30,120 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளோம். மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய 17 முன்பதிவு மையங்கள் திறக்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 8 லட்சம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு ஏற்பாடுகளை செய்துள்ளோம். சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் மட்டும் செல்ல தனியாக பாதை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம், விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது 18004256151 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதற்காக11 சிறப்பு குழுக்களும் அமைத்துஆய்வு மேற்கொள்ளப்படும். அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT