Published : 09 Jan 2020 07:03 AM
Last Updated : 09 Jan 2020 07:03 AM
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது தடத்தில் பணிகள் முடிக் கப்பட்டுள்ள 10 கி.மீ புதிய பாதை யில் 2 வாரங்களில் ரயில்சேவை தொடங்கவுள்ளது. இதனால், தென்மாவட்ட விரைவு ரயில்கள் இனி தாமதமின்றி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தினமும் 250 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 170 ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே சென்று வருகின்றன. மாநகரின் எல்லைப்பகுதிகள் நாளுக்குள் நாள் விரிவடைந்துள்ள நிலையில், அனைத்து மின்சார ரயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டுமென்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதேபோல், தென் மாவட்டங் களுக்கான விரைவு ரயில்களை இந்த வழியாக இயக்குவதால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்களின் சேவையிலும் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தென்மாவட்ட விரைவு ரயில்களும் பெரும்பாலான நாட்களில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாகச் செல்கிறது.
இதற்கிடையே, தெற்கு ரயில் வேயின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். மொத்தமுள்ள 30 கி.மீ தூரத்தில் முதல்கட்டமாக கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் இடையே சுமார் 10 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, வரும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, மக்களின் பயன்பாட்டுக்கு இந்த புதிய பாதையில் ரயில்சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே வேகம் காட்டி வருகிறது. தற்போது, கூடுவாஞ்சேரி - பொத்தேரி இடையே 10 கி.மீ தூரத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு நடத்தி ஒப்புதல் அளிக்கவுள்ளார். எனவே, பொங்கல் பரிசாக, இந்த தடத்தில் ரயில்சேவை இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளோம். இதன்மூலம் தென்மாவட்ட விரைவு ரயில்களில் தாமதம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம். மேலும், செங்கல்பட்டுக்கு கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது.
இதேபோல், மதுரை - உசிலம்பட்டி இடையே 37 கி.மீ தூரத்துக்கு புதிய தண்டவாளம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளதால், இந்த தடத்திலும் விரைவில் ரயில்சேவை தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT