Published : 09 Jan 2020 06:53 AM
Last Updated : 09 Jan 2020 06:53 AM

ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை நஷ்டமடைந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை

ரூ. 3 ஆயிரம் கோடி முதலீட்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது.

39-வது நாள் விசாரணையான நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் தங்களது வாதத்தில், ‘‘தூத்துக்குடி வாழ் மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக அந்த ஆலையை மூடுவதைத்தவிர வேறு வழியே இல்லை. 25 கிமீ சுற்றளவுக்கு பசுமைப் போர்வை ஏற்படுத்தப்படவில்லை.

ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி சுற்று வட்டார நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது. ரூ. 3 ஆயிரம் கோடி முதலீடு செய்து ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய ஆலை நிர்வாகம் தற்போது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் ஆலை நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என வாதிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிடும் போது, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல் படுவோம். கூடுதலாக கட்டுப் பாடுகள் விதித்தாலும் அதை ஏற்கத்தயார் என்றார்.

ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பு, ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x