Published : 07 Jan 2020 04:55 PM
Last Updated : 07 Jan 2020 04:55 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக பாலமேடு வாடிவாசலுக்கு வர்ணம் பூசி புதுப் பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமர்ந்து பார்க்க பாதுகாப்பான கேலரிகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண வெளிநாட்டு, உள்நாட்டு பார்வையாளர்கள் அதிகளவு திரள்வார்கள்.
இதில், பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டியை கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் 60000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய கேலரிகள் அமைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. இதனையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டுக்காக பாலமேடு வாடிவாசல் வர்ணம் பூசும் பணி நடந்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து பார்ப்பதற்காக பிரத்யேக கேலரிகள் அமைக்கப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுப்போட்டியை பார்க்க பாலமேடு வருவதால் அவர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
வாடிவாசலில் அவிழ்த்துவிடும் காளைகள், பார்வையாளர்கள் பகுதிக்குள் புகாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு இரண்டு அடக்கு தடுப்புவளையம் அமைக்கும் பணியும் தற்போது பணி நடக்கிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த வீரர், காளைக்கு கார் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டின பசுக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த வீரர், காளைக்கு நாட்டின பசு வழங்கவும் விழா கமிட்டினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT