Last Updated : 07 Jan, 2020 02:57 PM

 

Published : 07 Jan 2020 02:57 PM
Last Updated : 07 Jan 2020 02:57 PM

வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கும் 'தங்க மனசு' திட்டம்: தூத்துக்குடி ஆட்சியர் தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க உதவும் வகையில் 'தங்க மனசு' என்ற புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்து, விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், விதவைகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.2,02,000 வழங்கி வருகிறது. நல்ல வீடு கட்டிக்கொள்ள கூடுதலாக தேவைப்படும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கம் செலுத்த முடியாமல் வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம், 'தங்க மனசு' திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்திய அரசின் சார்பில் நாட்டிலுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் வீடுகள் கட்டித்தரும், பாரதப் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மூலம், வீடற்ற வறிய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு, அவர்களது நிலஉடமை மற்றும் குடியிருப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும் அரசினால் வழங்கப்படும் மானியத் தொகை ரூ.1,70,000 கழிப்பறை மானியம் ரூ.12,000 ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ.20,000 ஆக மொத்தம் ரூ.2,02,000 ஒரு வீடு கட்டப் போதுமானதாக இல்லை என்பதால் உள்ளுரில் உள்ள புரவலர்கள் தாமாக முன்வந்து, இந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் செலவினங்களை தமது பொறுப்பில் ஏற்றுக் கொள்ளும் திட்டமே தங்க மனசுத் திட்டம் .

பாரதப் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் 2016-17 முதல் 2019-20 வரையில் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு வேலையைத் தொடங்கி பணமின்றி பாதியில் நிற்கும் அல்லது கட்டுமானம் தொடங்க இயலாத பயனாளிகளுக்கு தங்கமனசுத் திட்டத்தின் கீழ் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தாலும் யாருக்கு எப்படி உதவுவது என தெரியாமல் திகைக்கும் தங்கமனசுக்காரர்களைக் கண்டறிந்து பயனாளிகள் பயன்பெற வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட வர்த்தகர்கள் மற்றும் புரவலர்கள் தங்கள் பகுதியில் வீடு கட்டுவதற்கு வசதியில்லாத பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிதியுதவியினை வழங்கி வீட்டினை கட்டி முடித்து ஏழை குடும்பத்தினர் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதுவரை நிலுவையில் உள்ள வீடுகளை கட்டி முடிப்பதற்கு தேவையான நிதியுதவி அல்லது கட்டுமானப் பொருட்களை வழங்க விரும்பும் தங்க மனசுக் காரர்கள் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினையும், மாவட்ட அளவில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியிலும். 0461-2340575 7373704229 9443147321 ஆகிய தொலைபேசி எண்களிலும். drdatut@nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x