Published : 06 Jan 2020 07:38 PM
Last Updated : 06 Jan 2020 07:38 PM
கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமியும், பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமியும் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்து 139 வாக்குகள் பதிவான நிலையில் ஆட்டோ சின்னத்துக்கு 2,580 வாக்குகளும், பூட்டு சாவி சின்னத்துக்கு 1,179 வாக்குகளும் கிடைத்தன.
இந்நிலையில் ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜெயலட்சுமிக்குப் பதிலாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம், சான்றிதழுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டார். அறிவிப்பு சரியாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மாற்றி அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியுள்ளார். இதனைத் தொடந்து ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் விஜயலட்சுமியின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக விஜயலட்சுமி பதவி ஏற்கும் விழா அதே ஊராட்சிக்கு உட்பட்ட வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜயலட்சுமி காலை 10 மணிக்குப் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீஸார் கிராம சேவை மையத்தின் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் 100 பெண்கள் உள்ட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று, பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் போலீஸார், ''இது அரசு நடத்தும் விழா. இதனைத் தடுக்கக் கூடாது. கலைந்து செல்லுங்கள்'' என்று கூறினர்.
ஆனால், எதிர்ப்பாளர்கள் கலைந்து செல்லாமல் தேர்தலில் ஜெயலட்சுமிதான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதிகாரிகள் குளறுபடியால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். விஜயலட்சுமி ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு தள்ளி வைக்கப்படுவதாக கடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஜெயலட்சுமியின் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT