Published : 06 Jan 2020 04:56 PM
Last Updated : 06 Jan 2020 04:56 PM

சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறைப் படம்: பணத்துக்காக ஆகம விதிகளை மீறினாரா குருக்கள்?

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மூலவரான ராமநாதசுவாமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் படம் எடுத்த ஆலயப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் தலையாய திருத்தலமாகும்.

இந்தியாவில் உள்ள நான்கு முக்கியத் திருத்தலங்களான துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகியவற்றில் தெற்கே அமைந்த சிவத்தலம் ராமேசுவரம் மட்டும் ஆகும்.

அதேபோல் பன்னரிண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கெ பதினொன்றும் தெற்கே அமைந்துள்ள ராமேசுவரத்தில் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடை காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலமாக விளங்குகிறது.

ராமாயண தொடர்பு கொண்ட தலமாக அழைக்கப்படும் ராமேசுவரம் ராம பிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் ராமேசுவரம் மிக முக்கிய சிறப்பை பெற்றுள்ளது.

ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இங்குள்ள சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.

இவர்களைத் தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியர் மற்றும் நேபாள மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தைப் படம் எடுக்கக் கூடாது என விதிகள் உள்ளன.

இந்நிலையில் மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இரண்டு நாட்களாக வைரலாகி வரும் இந்தப் படத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்காக ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்து கொடுத்து அதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையை கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகம விதிகளை மீறி ராமநாதசுவாமி கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்த ஆலய குருக்கள் மீதும் இதற்கு துணையாக இருந்தவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையாளரிடம் இந்து மக்கள் கட்சியும் சார்பாக புகார் மனுவும் திங்கட்கிழமை அளிக்கப்பட்டது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x