Published : 06 Jan 2020 04:54 PM
Last Updated : 06 Jan 2020 04:54 PM

ஜேஎன்யு வன்முறை: பாஜக அரசின் ஆதரவுடன் ஏபிவிபி நடத்திய தாக்குதல்; முத்தரசன் கண்டனம்

முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

ஜேஎன்யு பயங்கரவாதிகள் வன்முறைக்கு பல்கலைக்கழக வளாக துணைவேந்தர் பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் அறிவுத்துறையின் அடையாளமாகவும், ஜனநாயகப் பயிற்சிப் பாசறையாகவும் விளங்கி வரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கடந்த 2 நாட்களாக ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிவிபி கும்பலின் வன்முறைக் களமாக்கப்பட்டிருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வன்முறைக் கும்பல் இரும்புத் தடியால் தாக்கியதில் மாணவர் தலைவரின் மண்டை உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் ரத்தக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தின் துணைவேந்தர் கலகக் கும்பலையும், குண்டர்களையும் பணியாட்களாக நியமித்து வருகிறார் என்பதும் பல்கலைக்கழக வளாகத்தின் எல்லை தாண்டி நுழைந்த பயங்கரவாதிகள் வன்முறைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பொறுப்புக்கு சிறிதும் தகுதியற்ற அவரையும் அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட தகுதியற்றவர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகத்தை யுத்த களமாக்கிய குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடாமல் கைது செய்யப்பட வேண்டும். மத்திய பாஜக அரசின் ஆதரவோடு ஏபிவிபி அமைப்பினர் நடத்திய வன்முறைத் தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x