Published : 06 Jan 2020 04:17 PM
Last Updated : 06 Jan 2020 04:17 PM
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல்லில் அடைந்த தோல்விக்கான காரணத்தை வார்டு வாரியாக ஆராய அம்மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 7 வார்டுகளில் மட்டுமே அதிமுகவினரால் வெற்றிபெறமுடிந்தது. எப்படியும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பிடித்தவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டுகளை கூட அதிமுகவினர் கூட்டணிக் கட்சியினருக்கு கொடுக்கவில்லை.
கூட்டணிக்கட்சிகளான பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., கட்சியினர் தலா ஒருவார்டிலாவது போட்டியிட விரும்பி கடைசிவரை முயற்சித்தும் வழங்கப்படவில்லை.
இதனால் தே.மு.தி.க., குஜிலியம்பாறை மாவட்ட ஊராட்சி வார்டில் மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிவிடவேண்டும் என்ற அதிமுகவின் குறிக்கோள் தேர்தல் முடிவுகளால் எட்டமுடியவில்லை.
வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெறமுடிந்தது. இது அதிமுக விற்கு படுதோல்வியாக பார்க்கப்படுகிறது. அதுவும், வேடசந்தூர் தொகுதி அதிமுக வசம் இருந்தும் அந்த தொகுதிக்குட்பட்ட நான்கு மாவட்ட ஊராட்சி வார்டில் இரண்டு இடங்களை திமுக கைப்பற்றியது.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொகுதியான திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டில் ஒன்றை திமுக கைப்பற்றியது. அதேபோல் அதிமுக எம்.எல்.ஏ., உள்ள நிலக்கோட்டை தொகுதியில் உள்ள மூன்று மாவட்ட
ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இரண்டில் திமுக வெற்றிபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ., பரமசிவம் ஆகியோர் கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டபோதும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யமுடியவில்லை.
ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள திமுக எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட 14 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 11 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது
அதிமுகவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆளுங்கட்சியாக இருந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மக்களின் நன்மதிப்பை பெறமுடியிவில்லையே என்ற வருத்தம் அதிமுகவினரிடையே காணப்படுகிறது.
இதேபோல் திமுக எம்.எல்.ஏ.,க்களான இ.பெரியசாமி தொகுதிக்குட்பட்ட ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், அர.சக்கரபாணி தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், இ.பெ.செந்தில்குமார் தொகுதிக்குட்பட்ட பழநி, கொடைக்கானல் ஆகியவற்றை திமுகவே கைப்பற்றியது.
எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி ஒன்றியத்தை திமுக வென்றது. ஆனால் நத்தம் ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றியது. திமுக எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்குட்பட்ட ஒரு ஒன்றியத்தை மட்டுமே அதிமுகவால் கைப்பற்றமுடிந்தது.
ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் ஒன்றியத்தை திமுக கைப்பற்றிது. இதேபோல் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றியது.
முன்னாள் அமைச்சர் விசுவநாதனின் சொந்த ஊருக்குட்பட்ட சாணார்பட்டி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. அதுவும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் பகுதியான ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் ஒன்று இரண்டு இடங்களை மட்டுமே பிடித்து அதிமுக படுதோல்வியடைந்தது.
இந்த தோல்விகளை அலசி ஆராய வார்டு வாரியாக பதிவான வாக்குகளை பெறமுடிவு செய்துள்ளது.
எந்த பூத்தில் எந்த ஊர் மக்கள் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆராய முடிவு செய்துள்ளனர்.
கடந்தமுறை நடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதற்கான காரணத்தை அதிமுகவினர் வார்டுவாரியாக ஆராய்ந்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு பூத்துக்களில் ஆயிரம் வாக்குகள் இருந்தநிலையில் இரண்டிலும் சேர்த்து அதிமுக 20 வாக்குகளை மட்டுமே பெற்றது தெரியவந்தது.
ஆளுங்கட்சி மீதான அருப்தியா, கூட்டணி சேர்ந்ததில் உள்ள அதிருப்தியா என்பதை ஆராயும் பணியில் அதிமுகவினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். ஆய்வின்முடிவில் இதுகுறித்து கட்சித்தலைமைக்கு நிலைமையை எடுத்துரைக்கவும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT