Published : 06 Jan 2020 03:44 PM
Last Updated : 06 Jan 2020 03:44 PM
தமிழகத்தில் மறைமுக தலைவர் தேர்தலில் வெற்றி, தோல்வி இழுபறியாக இருக்கும் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பதவியேற்க வந்த கவுன்சிலர்களை, அந்தந்த கட்சி நிர்வாகிகள் பதவியேற்று முடிந்ததும் பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.
பதவியேற்பு விழாவை காலை 10 மணிக்குள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கவுன்சிலர்கள் நல்ல நேரம் பார்த்து பதவியேற்க வந்ததால் அனைத்து மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவியேற்பு விழா தாமதமாக தொடங்கியது.
பதவியேற்பு விழாவுக்கு கவுன்சிலர்கள், அந்தந்த கட்சி மாவட்ட செயலாளர்களை, ஒன்றிய செயலாளர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். திமுக அல்லது அதிமுக கூட்டணி பெரும்பான்மை கவுன்சிலர்களை பெற்ற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கவுன்சிலர்கள் சுதந்திரமாக வந்து பதவியேற்றினர்.
ஆனால், மறைமுக தலைவர் தேர்தலில் வெற்றிக்கு ஓரிரு கவுன்சிலர்கள் தேவைப்படும் மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்களில் கவுன்சிலர்களை அந்த கட்சி நிர்வாகிகள் மொத்தமாக பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்கள் பதவியேற்று முடித்ததும், அவர்களுக்காக தயாராக இருந்த வாகனங்களில் அவர்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
பரபரப்பாக நடந்த பதவியேற்பு விழா..
தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமான மாவட்ட கவுன்சிலர்களை பெற்றதால் இந்த மாவட்டங்களில் திமுக எளிதாக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் நிலை உள்ளது.
அதுபோல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக அதிகமான கவுன்சிலர்களை பெற்றதால் இந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் நடக்கவில்லை.
சிவகங்கை மாவட்டடத்தில் திமுகவும், அதிமுகவும் சரிக்கு சமமாக தலா 8 மாவட்ட கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் இங்கு மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி உள்ளது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் தான் பல இடங்களில் மறைமுக தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.
இந்த பகுதிகளில் சுயேச்சை மற்றும் மற்ற கூட்டணி கட்சி கவுன்சிலர்களை இழுக்க திமுக, அதிமுக இரு கட்சிகளுமே முயற்சி செய்து வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, அலங்காநல்லூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு ஓரிரு கவுன்சிலர்கள் அடிப்படையில் உள்ளதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் குதிரை கொம்பாக உள்ளது.
இந்த ஒன்றியங்களில் பதவியேற்று விழா முடிந்ததும் கவுன்சிலர்கள் அவரர் கட்சி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியத்தில் மட்டும் தலைவர் தேர்தலில் திமுக அதிமுக இடையே இழுப்பறி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், சாக்கேகாட்டை, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக, அதிமுக கூட்டணி நெருக்கமான கவுன்சிலர்களை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கடலாடி, கமுதி, திருப்புல்லாணி, நயினார் கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, வத்திராயிருப்பு ஒன்றியங்களிலும் திமுக, அதிமுக நெருக்கமான கவுன்சிலர்களை பெற்றுள்ளனர்.
இதுபோல், வெற்றி இழுபறியாக உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பதவியேற்க வந்த கவுன்சிலர்கள் பதற்றமாக பதவியேற்றதும், அவர்களை அவர்கள் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு பாதுகாப்பாக வானங்களில் அழைத்துச் சென்றதுமாக பரபரப்பாக ஊரக உள்ளாட்சித்தேர்தல் கவுன்சிலர்கள் பதவியேற்று விழா நடந்து முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT