Published : 06 Jan 2020 01:09 PM
Last Updated : 06 Jan 2020 01:09 PM
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் காய்கறிகள் விலை உச்சத்தில் உள்ளது. எகிப்து வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்குவதால் உள்ளூர் வெங்காயம் விலை இன்னும் குறையாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதமாக நல்ல மழை பெய்ததால் காய்கறிகள் உற்பத்தி குறைந்தது. சந்தைகளில் வரத்து வீழ்ச்சியடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசியக் காய்றிகள் விலை உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை எப்போதும் இல்லாதவகையில் உச்சத்திற்குச் சென்றது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத் மாநிலங்களில் வரலாறு காணாத மழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் வெங்காயவிலை விண்ணை முட்டும் அளவுக்குஉயர்ந்தது.
சின்ன வெங்காயம் ரூ.180 வரையும், பெரிய வெங்காயம் ரூ.150 வரையும் விற்றது. அதன்பிறகு மத்திய, மாநில அரசுகள் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. ஆனாலும், எகிப்து வெங்காயம் பற்றி வதந்திகளை பரப்பியதால் மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதன்பிறகு அரசு எகிப்து வெங்காயம் பற்றி விழிப்புணர்வு செய்ததால் மக்கள் வாங்க ஆர்வம் காட்டியபோது வியாபாரிகளும் உள்ளூர் வெங்காயத்தை கூடுதல் விலைக்கு விற்க எகிப்து வெங்காயத்தை பதுக்கினர்.
அதிகாரிகள் ஆய்வு செய்து பதுக்கல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காததால் தற்போது வரை சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை குறையவில்லை.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120க்கும், பெரிய வெங்காயம் ரூ.80க்கும் விற்பனையானது.
அதுபோல், காய்கறிகள் வரத்தும் குறைந்ததால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்தது. தற்போது கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதால் வீடுகளில் அசைவ உணவு தவிர்க்கப்படுகிறது.
காய்கறிகளை மக்கள் அதிகளவு வாங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், போதுமான அளவு காய்கறிகள் சந்தைக்கு வராததால் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ கராட் ரூ.50 விற்றது. ஆனால், கராட் தரமில்லாமல் சிறுத்துப்போய் விற்பனைக்கு வந்தது. பீன்ஸ் கிலோ ரூ.40 முதல் ரூ.50, உருளை கிழக்கு கிலோ ரூ.50, தக்காளி கிலோ ரூ.20, பீட்ரூட் கிலோ ரூ.40, புடலங்காய் கிலோ ரூ.30, வெண்டைக்காய் கிலோ ரூ.30 விற்றது. பாகற்காய், முட்டைகோஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட சில காய்கறிகள் விற்பனைக்கு மிகக் குறைவாகவே வந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சபரிமலை சீசன் வரை காய்கறிகள் விலை அதிகரிக்கத்தான் செய்யும். எகிப்து வெங்காயம் காரம் அதிகமாக சமையலுக்கு நல்லாயில்லை என்று வாடிக்கையாளர்கள் வந்து சொல்கின்றனர்.
அதை நாங்கள் வாங்கி விற்பதில்லை. மேலும், எகிப்து வெங்காயம் நிறம் கரும்சிவப்பில் இருப்பதால் அதை மக்கள் விரும்பி வாங்க ஆர்வம் காட்டவில்லை.
அதனால், உள்ளூர் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. தற்போதுதான் வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் விலை குறைய தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு சில வாரத்தில் பழையநிலைக்கு வெங்காயம் விலை குறையும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT