Published : 05 Jan 2020 03:05 PM
Last Updated : 05 Jan 2020 03:05 PM

ஊரகப் பகுதிகளிலும் திமுக கொடி பறக்கிறது; எது தேய்பிறை, எது வளர்பிறை என்பது விரைவில் தெரியும்: ஸ்டாலின் பேச்சு

சென்னை

ஊரகப் பகுதிகளிலும் திமுக கொடிகட்டிப் பறக்கிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன, எது தேய்பிறை, எது வளர்பிறை என்பது விரைவில் தெரியும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.


சென்னை சைதாப்பேட்டையில், கலைஞர் கணினி கல்வியகத்தைத் தொடங்கி வைத்த மு.க ஸ்டாலின், மறைந்த முதல்வர் கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘‘கலைஞர் கணினி கல்வியகம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் படித்த பட்டதாரிகள், வேலை இல்லாமல் இருக்கும், இளைஞர்கள், சகோதரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கருணாநிதியின் திருவுருவச்சிலை இங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி சிலையினை நாம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து, திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நகரங்கள் முழுவதும், ஊர்கள் தோறும் திறந்து வைப்பதற்கு காரணம் அவர் செல்லாத நகரங்கள் இல்லை, போகாத ஊர்கள் இல்லை.

முதன்முதலில் திமுக தேர்தல் களத்தில் இறங்கிய நேரத்தில், 57ம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில்தான் கருணாநிதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிறகு 62ம் ஆண்டு தஞ்சை தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின்னால் 67ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சைதை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அந்தத் தேர்தலின் போது, பொருளாளர் என்ற முறையில் அவரிடத்தில் அறிஞர் அண்ணா ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘தேர்தலைச் சந்திக்க நமக்கும் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை திரட்டுகிற பொறுப்பை பொருளாளராக இருக்கக்கூடிய நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். 10 லட்சம் ரூபாயை எப்படியாவது திரட்டி கொடுக்க வேண்டும்’ என்று கலைஞருக்கு அண்ணா உத்தரவிட்டார்.

அண்ணாவின் உத்தரவை ஏற்றுக்கொண்டு கருணாநிதி ஊர் ஊராக சென்றார். பொதுக்கூட்டங்களில் பேசினார். நாடகங்களில் நடித்தார். அதன் மூலமாக வசூல் செய்தார். அதையும் தாண்டி கழகத் தோழர் இல்லங்களுக்கு மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று சொன்னால், 500 ரூபாய், காலை சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்று சொன்னால் 500 ரூபாய் இரவு சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒரு தொகை, கொடியேற்றி வைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒரு தொகை, இப்படி ஊர் ஊராக தலைவர் கலைஞர் அவர்கள் சுற்றுப் பயணம் செய்து 500, 1000, 2000, 5000 என்று சிறுக சிறுக சேர்த்து அறிஞர் அண்ணா கேட்ட 10 லட்சம் அல்ல, 11 லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டி அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு 71ம் ஆண்டு மீண்டும் தேர்தலைச் சந்தித்தோம். மீண்டும் தலைவர் கலைஞர் அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி இதே சைதை தொகுதிதான். பொதுப்பணித்துறை அமைச்சராக மட்டும் இல்லை அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்த தொகுதியும் இதுதான் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சைதாப்பேட்டை என்பது கலைஞருடைய பேட்டை; சைதாப்பேட்டை என்பது கழகத்தினுடைய பேட்டை; அப்படிப்பட்ட சைதாப்பேட்டையின் மாவட்ட செயலாளராக இருக்கும் மா.சு. அவர்கள், எதைத் தொட்டாலும் அதில் ஒரு சிறப்பு இருக்கும். அதில் ஒருமுக்கியத்துவம் இருக்கும். அதில் ஒரு தனி முத்திரை இருக்கும். அவரிடத்தில் ஒரு பணியை ஒப்படைத்தால் நாம் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. அந்தப் பணியைத்தான் இன்றைக்கு அவர் நிறைவேற்றி இருக்கிறார். அவர் வரவேற்புரை ஆற்றும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் இதே போன்று, நீட் தேர்வுக் கொடுமையால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போன வேதனையால் தற்கொலை செய்து கொண்டு மாண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி அனிதா பெயரில், பயிற்சி மையம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதில் முதற்கட்டமாக 67 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியை முடித்து வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். 2வது கட்டமாக 61 பேர் பயிற்சி முடித்து வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

2 நாட்களாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சியிலே நல்லாட்சி தந்தவர்கள் நாம் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்துத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிலும் 9 மாவட்டங்கள் பாக்கி இருக்கின்றன. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலும் இன்னும் மீதம் இருக்கிறது.

இதில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது என்பது மரபு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் என்றால் ஆட்சி அவர்களிடத்தில் உள்ளது. மக்களும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வாக்களித்தால்தான் உள்ளாட்சியில் பணிகள் நடக்கும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு.

எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, ஊரக பகுதிகளில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி திமுக. அது வரலாறு. அதுவும் இப்போது மாற்றப்பட்டு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதி மட்டும் அல்ல, ஊரகப் பகுதிகளிலும் திமுக இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறோம்.

எனக்கு என்ன வேதனை என்றால், இந்த ஊடகங்கள், இப்போதும் என்ன செய்தி போடுகிறார்கள் என்றால், நீங்களே பார்த்திருப்பீர்கள்; நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை - இங்கே இருப்பவர்களைக் குறை சொல்லவில்லை. இவர்கள் ஒழுங்காகத்தான் எடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அதை ஒளிபரப்பக்கூடிய நிர்வாகம் யாருக்கு பயந்து செய்கிறார்கள் என்பது புரியவில்லை- அதிமுகவும், திமுகவும் சரிசமமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிடுகிறார்கள்.

என்ன சரிசமம்? சிந்தித்துப் பாருங்கள். நாடாளுமன்றத்திலும் இப்படித்தான் சொன்னார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதியிலும் போட்டியிட்டோம். தேனி தொகுதியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 39 இடங்களில் வெற்றி பெற்றும் பெரிய செய்தியாக அதைப் போடவில்லை. அதையும் மூடி மறைத்தார்கள். இப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் ஊரக, கிராம பகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

சில அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். முந்திரிக் கொட்டை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் வளர்பிறையாம். நாம் தேய்பிறையாம். எது வளர்பிறை? எது தேய்பிறை இந்த சராசரி அறிவுகூட ஓர் அமைச்சருக்கு இல்லை.

ஒன்றிய கவுன்சிலர்களை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் இடங்கள் 2,100. அதிமுக 1,781. எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தோற்றவர்களைத்தான் ஜெயிக்க வைத்தார்கள். ஜெயித்தவர்களை தோற்கடித்துள்ளார்கள். இவ்வளவு அக்கிரமங்கள் நடந்த பிறகு நாம் 2,100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள இடங்கள் 1,781. வித்தியாசம் எவ்வளவு? 319 இடங்களை தி.மு.க அதிகம் பெற்றுள்ளது. இது சரிசமமா? மாவட்ட கவுன்சிலர்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 243 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது 214 இடங்கள். வித்தியாசம் 29. எது அதிகம்? எது வளர்பிறை, எது தேய்பிறை? என முந்திரிக்கொட்டை அமைச்சரைக் கேட்கிறேன். அவரைப் பற்றி வருத்தப்படவில்லை. அரசியலுக்காக அப்படிச் சொல்லியாக வேண்டும்.

ஊடகத்திற்கும், பத்திரிகை துறைக்கும் என்ன வந்தது? உண்மையை வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே? எழுதக் கூடிய காலம் விரைவில் வரும். நான் அதிகம் பேச விரும்பவில்லை’’ இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x