Published : 05 Jan 2020 03:05 PM
Last Updated : 05 Jan 2020 03:05 PM

நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் ரிட் மனு ஒரு கண் துடைப்பு நாடகம்:  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

சென்னை

நீட் நுழைவுத் தேர்வு விலக்கு பெறுதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல், சட்ட மன்ற கூட்டத் தொடரையும், சட்ட மன்றத் தேர்தலையும் கணக்கில் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான கண் துடைப்பு நாடகமாகும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மாநில நிர்வாகிகள் ஏ.ஆர்.சாந்தி, ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஜீ.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மருத்துவம், பல் மருத்துவம் மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக இந்திய மருத்துவக் கழகம்,மற்றும் பல் மருத்துவக் கழகத்தின் விதிகளை செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ,ஓர் புதிய ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.இது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான கண் துடைப்பு நாடகமாகும்.

நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். விலக்குக் கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் மிகவும் உறுதியாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டித்தான் , மத்திய அரசும் நீட் நுழைவுத் தேர்வை திணித்துள்ளது. மாநில உரிமைகளை பறிக்கும் தனது செயலை நியாயப் படுத்திக் கொள்கிறது.

உச்சநீதிமன்றம், சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான தீர்ப்பை அளித்தால், அதை நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதின் மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும். கல்வியில், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பொழுது, அதை சரிசெய்வதற்காகத்தான் முதல் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது வரலாறு.

இந்நடைமுறையை பின்பற்றி, நாடாளுமன்றத்தின் மூலம் இதை சரி செய்திருக்க வேண்டும். அதை அதிமுக செய்யவில்லை. அதாவது, எம்சிஐ, டிசிஐ விதி முறைகளில் நீட் தேர்வை திணிக்க ,திருத்தம் செய்த பொழுது நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்க அளித்திருக்க முடியும். அதற்கான திருத்தத்தை , அதிமுக வலியுறுத்தி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் ,மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் ,மத்திய அரசு கொண்டு எம்சிஐ(MCI) டிசிஐ (DCI) யில் திருத்தங்களைச் செய்த பொழுது அதை எதிர்த்து, அதிமுக எம்பி-க்கள் வாக்களிக்க வில்லை. தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் ஆதரித்தனர்.

அடுத்து, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நடத்துவதை சட்டரீதியாக வலுப்படுத்தும் வகையில் ,தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறிய பொழுதும் அதை எதிர்த்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

அதிமுக நினைத்திருந்தால் என்எம்சி (NMC) மசோதாவில் திருத்தத்தை கொண்டுவந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, சென்ற ஆண்டே விலக்கு பெற்றிருக்க முடியும். அதை செய்யத் தவறிவிட்டது. நெஸ்ட் தேர்வை புகுத்துவதையும் தடுத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

நீட் தேர்விலிருந்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்குப் பெறுவதற்காக, தமிழக சட்டமன்றத்தில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட, இரண்டு மசோதாக்களுக்கும்,மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவில்லை.

மசோதாக்கள் நிராகரிக்கப்படதையும், மத்திய அரசுடன் இணைந்து நாடகமாடி, தமிழக அரசு, மக்களிடம் மறைத்துவிட்டது. இந்த மசோதாக்கள் நிரந்தர விலக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நேர்மாறாக, அதிமுகவின் மக்களவை தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எழுதும் தகுதியைப் பெறும் வரை, நீட்டிலிருந்து விலக்குப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக வின் சந்தர்ப்பவாதச் செயலாகும்.

மத்திய அரசின், வரைவு தேசியக் கல்விக் கொள்கை - 2019 - நீட் தேர்வு கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.பிஏ,பிஸ்சி போன்ற அனைத்து பட்டப் படிப்புகளுக்கும், பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும், 3, 5 & 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அக்கல்விக் கொள்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு ,நீட்டை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நெக்ஸ்ட் தேர்வு கூடாது, நெக்ஸ்ட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மருத்துவ மாணவர்கள் நடத்திய மாநாட்டில், மத்திய அரசுக்கு பயந்து, தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

இம்மாநாட்டில் புதுச்சேரி மாநில முதல்வர் கலந்து கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார். புதுச்சேரி மாநில முதல்வருக்கு இருந்த அக்கறை தமிழக முதல்வருக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கது.

இன்னிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் மூலம் ஒழித்துக் கட்டப்பட்ட பிறகு, நீட் இச்சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டப் பிறகு , உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனுவை தாக்கல் செய்வது ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

சட்ட மன்ற கூட்டத் தொடரையும், சட்ட மன்றத் தேர்தலையும் கணக்கில் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். மத்திய அரசை வலியுறுத்தி, நீட்டிலிருந்து விலக்கு பெற வேண்டிய தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.

இம் மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், நீட்டுக்கு ஆதரவான உத்தரவை வழங்கினால், அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை காரணம் காட்டி, தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ளலாம் என்ற முயற்சியாகும்.

எனவே, தமிழக அரசு மக்களை ஏமாற்றும் முயற்சிகளை கைவிட்டு, மத்திய அரசை வலியுறுத்தி, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் செய்து, நீட் தேர்விலிருந்து விலக்கைப் பெற வேண்டும். நெக்ஸ்ட் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x