Published : 04 Jan 2020 05:26 PM
Last Updated : 04 Jan 2020 05:26 PM
சட்டப் பேரவை தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக தெரிவித்து அதை மெய்ப்பித்தும் காட்டியவர் பி.எச். பாண்டியன் என்று அவருடன் அரசியலில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அவரது மறைவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்திலுள்ள சொந்த ஊரான கோவிந்தபேரியில் சோகம் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி என்ற கிராமத்தை சேர்ந்த பி.எச். பாண்டியன் (75) 1945, மார்ச் 29-ம் தேதி பிறந்தார். இவரது மனைவி சிந்தியாபாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்தவர். அவரும் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.
இவருக்கு டாக்டர் தேவமணி என்ற மகளும், பால் மனோஜ்பாண்டியன், அரவிந்த் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். சட்டத்தில் முதுகலை படித்துள்ள இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார்.
அதிமுக தொடங்கியதில் இருந்து 1972 முதல் அக் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். 1972 முதல் 1988 வரை அதிமுக வழக்கறிஞர் அணி மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 1977- 1991-ம் ஆண்டு வரையில் 4 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1989-ல் அதிமுக ஜானகி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டப் பேரவை உறுப்பினர் என்ற பெருமை பெற்றவர்.
1980-1984-ல் தமிழக சட்டப் பேரவை துணை தலைவராகவும், 1985 முதல் 1989 வரை சட்டப் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். 1999-ல் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்தார்.
பிரேசில், ஜப்பான், கனடா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற சட்டம், சட்டப் பேரவை, நாடாளுமன்ற நிர்வாகம் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
பிஎச் பாண்டியனின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்குவகித்த சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கூனியூர் மாடசாமி கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், 1980-ம் ஆண்டிலேயே சென்னை அண்ணாநகரில் வீடுகட்டி பி.எச். பாண்டியன் குடியேறினார். இந்த வீட்டை எம்.ஜி.ஆர். திறந்து வைத்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பி.எச். பாண்டியனின் மகள் நடன அரங்கேற்றத்திலும் எம்.ஜி.ஆர். பங்கேற்றிருந்தார். சென்னையில் இருந்தாலும் வாரந்தோறும் சேரன்மகாதேவிக்கு வந்து சொந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
எம்.எல்.ஏ., எம்.பியாக இருந்தபோது திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். சேரன்மகாதேவி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்திருந்தார். இத் திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்திருந்தார்.
சட்டப்பேரவை தலைவருக்குள்ள அதிகாரம் என்ன என்பதை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தபோது 9 திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்ட நகலொன்றை எரித்தனர். இதையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்து அதிரடி காட்டியிருந்தார். பின்னர் தகுதிநீக்கம் செய்ததது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நாட்டிலேயே எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை முதன்முதலாக எடுத்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
சொந்த ஊரில் சோகம்:
பி.எச். பாண்டியன் மறைவை அடுத்து கோவிந்தபேரி கிராமத்தில் மக்கள் சோகமடைந்தனர். அவரது குடும்பத்தினர் இங்குள்ள வீட்டில் இல்லாத நிலையிலும், அவரது உறவினர்களிடம் அப்பகுதி மக்கள் துக்கம் விசாரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT