Published : 04 Jan 2020 12:02 PM
Last Updated : 04 Jan 2020 12:02 PM

மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்

மதுரை

மதுரை மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களில் வென்ற நிலையில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, தேமுதிக தலா 3 இடங்களில் வென்றன.

மதுரை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 49 இடங்களையும், திமுக 38 இடங்களையும் வழங்கியது. இதில் பாஜக, தேமுதிக தலா 3, காங்கிரஸ் 4 என மொத்தம் 10 இடங்களில் மட்டுமே வென்றன.

பாஜக 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும், 5 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் மட்டுமே வென்றது. 19 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 1 மாவட்ட ஊராட்சி வார்டில் போட்டியிட்டதேமுதிக 3 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வென்றது.

9 ஊராட்சி ஒன்றிய வார்டு களிலும், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 4 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வென்றது. 5 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட்ட மதிமுக, 7 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 1 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 3 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், 2 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 1 மாவட்ட ஊராட்சி வார்டில் போட்டியிட்ட பா.பிளாக் ஒரு மாவட்ட ஊராட்சியில் வென்றது.

கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறாதது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பிரதான கட்சியை நம்பியே களம் இறங்குகிறோம். போதிய தொண்டர்கள் பலம் இல்லாதது, தேர்தல் பணியை விறுவிறுப்பாக மேற்கொள்ளாதது என பல குறைகள் எங்களிடம் உள்ளன. அதே நேரம் பிரதான கட்சிதான் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் பணியை திட்டமிட்டு செய்ய வேண்டும். இதை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மேற்கொள்ளவில்லை.

கூட்டணி கட்சியின் வார்டுகளின் வெற்றியை எளிதாக பறிக்க மட்டுமே மாற்று அணியிலுள்ள பிரதான கட்சி திட்டமிடுகிறது. இதை எதிர் கூட்டணியிலுள்ள பிரதான கட்சி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

பிரதான கட்சிகள், கூட்டணி தர்மத்தை மதிக்காததே இதற்கு காரணம். தேர்தல் முடிவுக்குப் பின்னரும் இது குறித்து கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கூட்டணி கட்சி தோற்றாலும், அது மொத்த கூட்டணிக்குத்தான் தோல்வி என நினைப்பதில்லை. இந்த நிலை மாறினால் மட்டுமே கூட்டணி தர்மம் நிலைக்கும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x