Published : 03 Jan 2020 07:40 PM
Last Updated : 03 Jan 2020 07:40 PM

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியிலிருந்து அதிமுக மீண்டெழுந்துள்ளது:  ஓபிஎஸ், ஈ.பிஎஸ் வாக்காளர்களுக்கு நன்றி

சென்னை

உள்ளாட்சித்தேர்தலில் பெற்ற வெற்றி எட்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக தமிழ் நாட்டு மக்களின் அன்பையும், ஆதரவையும் மீண்டும் பெற்று வருகிறது என்பதையே காட்டுகின்றன என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர்.

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக , திமுக சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு பெற்ற வெற்றி என்பதால் கொண்டாடப்படுகிறது. தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக தலைமையும் இதே ரீதியில் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

“ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2019, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி !

தமிழ் நாட்டின் 27 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்திருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அனைத்திந்திய அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளையும், அதே போல், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும் வென்றிருக்கின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் பெருவாரியான வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சியின் நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் இயக்கம், அம்மா அவர்களின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு, பல்வேறு சோதனைகளை மனஉறுதியுடன் எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்து வருகிறது. அதிமுகவின் உயிர் நாடிகளாக விளங்கும் கட்சி உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் உழைப்பாலும், தன்னம்பிக்கை கொண்ட உறுதியான முயற்சியாலுமே இந்த வெற்றிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

எட்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக, கட்சி உடன்பிறப்புகளின் உழைப்பாலும், அம்மா அமைத்துத் தந்த அதிமுக அரசு நிகழ்த்தி வரும் பல்வேறு சாதனைகளாலும், தமிழ் நாட்டு மக்களின் அன்பையும், ஆதரவையும் மீண்டும் பெற்று வருகிறது என்பதையே இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

``புரட்சித் தலைவி அம்மா’’ என்னும் பன்முகத்திறன் கொண்ட ஒரு மகத்தான ஆளுமையும், தலைமையும் மறைந்த பிறகு, அதிமுகவிற்கு முடிவுரை எழுத முயற்சித்தவர்கள் எல்லாம் மூக்கின்மேல் விரல் வைக்கும் அளவுக்கு கட்சியை காப்பாற்றி இருக்கிறோம்; இரட்டை இலையை மீட்டிருக்கிறோம்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய சலசலப்புகளை எதிர்கொண்டு, ஆட்சியை உறுதிபட நிலைநாட்டி இருக்கிறோம்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளை மீட்டிருக்கிறோம். இப்பொழுது 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் செல்வாக்கையும், இரட்டை இலை சின்னத்தின் அரசியல் பெருமையையும் நிலைநாட்டி இருக்கிறோம். இவை அனைத்தும் அதிமுக அரசு நிகழ்த்தி வரும் மகத்தான மக்கள் பணிகளுக்குக் கிடைத்த பரிசு என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம்.

தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்க இருக்கும் கட்சி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், நீங்கள் அனைவரும் சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களிடம் சென்று அவர்களின் குரலுக்கு செவிமடுத்து, அவர்களின் தேவைக்கு ஏற்ப பணி செய்து, அதிமுகவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு, எங்களது இதயமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில், கட்சியின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக. கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், பல்வேறு பொறுப்புகளில் உள்ள கழக உடன்பிறப்புகள், கழகத்தின் மீது பேரன்பு கொண்ட தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிவரும் நாட்களில் இன்னும் சிறப்பாகப் பணியாற்றி, தமிழகத்தின் அனைத்துத் தேர்தல்களிலும் முழுமையான வெற்றிகளைப் பெற உறுதி ஏற்போம்”.

இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x