Published : 03 Jan 2020 06:56 PM
Last Updated : 03 Jan 2020 06:56 PM
ஆரணியை அடுத்துள்ள சேவூரில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு அரிசி மூட்டை என விநியோகம் செய்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் சொந்த கிராம ஊராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள சேவூர் கிராம ஊராட்சி ஏறக்குறைய 13 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய கிராம ஊராட்சியாக இருக்கிறது. இது தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் சொந்த கிராமமாகும்.
இந்த ஊராட்சிக்கு கடந்த 30-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அமைச்சரின் உறவினரான தீபா சம்பத், சேவூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலின்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தீபா சம்பத், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தருமன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கவுரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து ஒரு ஓட்டுக்கு 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளை அங்குள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது.
புகாரின்பேரில் காவல் துறையினர் அரிசி மூட்டைகளை வாங்க காத்திருந்த மக்களை விரட்டிவிட்டு, அரிசி ஆலையை பூட்டி அரிசி மூட்டை விநியோகம் செய்வதையும் தடுத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேட்பளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவானந்தம் புகார் மனு அளித்தார்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் சேவூர் கிராம ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையில் அமைச்சரின் உறவினரான தீபா சம்பத்தை தோற்கடித்து திமுகவைச் சேர்ந்த ஷர்மிளா தரணி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தருமனும் தோல்வியடைந்தார்.
மாவட்ட கவுன்சிலராக கவுரி ராதாகிருஷ்ணன் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் சொந்த கிராம ஊராட்சியையே திமுக கைப்பற்றியிருப்பது அதிமுகவினர் இடையில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர் வாக்களித்த வாக்குச்சாவடியில் திமுக 200-க்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT