Published : 03 Jan 2020 05:24 PM
Last Updated : 03 Jan 2020 05:24 PM
வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் 3-வது வார்டு வேட்பாளர் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில். இங்குள்ள 3-வது வார்டு உறுப்பினர்க்கான தேர்தலில் எஸ்பி.ரமேஷ்(52) என்ற விவசாயி கட்டில் சின்னத்தில் போட்டியிட்டார்.
வார்டில் உள்ள 371 மொத்த வாக்குகளில், 253 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது 254 வாக்குகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது சம்பந்தமாக வேட்பாளர் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு மெயிலில் புகார் அனுப்பி உள்ளார்.
இது குறித்து இவர் கூறியதாவது:
ஜீப் சின்னத்திற்கு 129வாக்குகளும், கட்டில் சின்னத்திற்கு 83 வாக்குகளும், சாவி சின்னத்திற்கு 14 வாக்குகளும், செல்லாத வாக்குகள் 28 என்று வாக்கு எண்ணும் மையத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் 253 வாக்குகள்தான் இந்த வார்டில் பதிவாகி உள்ளன. வாக்குப்பெட்டியை திறந்து எங்களிடம் முறையாக காண்பிக்கவில்லை. வாக்குப்பதிவிற்குப் பின்பு ஏதோ முறைகேடு நடைபெற்றதாகத் தெரிகிறது.
எனவே சிசிடிவி கண்காணிப்பு கேமராவுடன் மறுதேர்தல் நடத்த வேண்டும். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT